உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனக்கணித போட்டியில் ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்: 14 வயது மனித கால்குலேட்டரின் அசாத்திய திறமை

மனக்கணித போட்டியில் ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்: 14 வயது மனித கால்குலேட்டரின் அசாத்திய திறமை

மும்பை: மனக்கணிதப் போட்டியில் அபாரமாக கணக்கிட்டு, ஒரே நாளில் ஆறு கின்னஸ் சாதனைகளை படைத்த, மஹாராஷ்டிராவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆர்யன் சுக்லாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சிறுவன் ஆர்யன் சுக்லா, 14; சிறு வயது முதலே கணிதத்தின் மீதான ஆர்வம் காரணமாக, மிக வேகமாகவும், துல்லியமாகவும் மனக் கணக்கில் சிறந்து விளங்கினார்.

பட்டம்

தன், 6 வயது முதலே உலகளவில் பல்வேறு மனக் கணித போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை படைத்துள்ளார்.கடந்த ஆண்டு இத்தாலி நாட்டின், 'டிவி' தொடரான, 'லோ ஷோ டீ ரெக்கார்ட்'ல் பங்கேற்ற இவர், 50 ஐந்து இலக்க எண்களை கால்குலேட்டர் உதவியின்றி, 25.19 வினாடிகளுக்குள் மனதிற்குள்ளேயே வேகமாக கூட்டி சாதனை படைத்தார். இந்த சாதனையின் போது, ஒரு கூட்டலை கணக்கிட அவருக்கு 0.5 வினாடிகள்மட்டுமே தேவைப்பட்டது.'மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்துடன் பல்வேறு போட்டிகளில் அசத்திய சிறுவன் ஆர்யன், சமீபத்தில் ஒரே நாளில் ஆறு கின்னஸ் சாதனைகளை படைத்தார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், இந்த சாதனைக்கான ஏற்பாட்டை கின்னஸ் நிறுவனம் செய்திருந்தது.

யோகா, தியானம்

இதில் பங்கேற்ற ஆர்யன், பேனா, பேப்பர் மற்றும் கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த கருவியும் இன்றி மனதாலேயே கணக்கிட்டு பார்வையாளர்களை வாயடைக்க செய்தார்.முதலில், 100 நான்கு இலக்க எண்களை மனதளவில் கூட்டுவதற்கு 30.9 வினாடிகள் எடுத்துக் கொண்ட ஆர்யன், 200 நான்கு இலக்க எண்களை கூட்ட, 1 நிமிடம் 9.68 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.அதேபோல், 50 ஐந்து இலக்க எண்களை 18.71 வினாடிகளில் மனதளவில் கூட்டி சாதனை படைத்தார். அடுத்ததாக, 20 இலக்க எண்ணை மனரீதியாக 10 இலக்க எண்ணால், வகுக்க இவர் எடுத்துக்கொண்ட நேரம் 5 நிமிடம் 42 வினாடிகள். இரண்டு ஐந்து இலக்க எண்களை, 10களின் தொகுப்பை மனரீதியாகப் பெருக்க 51.69 வினாடிகள் ஆர்யன் எடுத்துக் கொண்டார். இரண்டு எட்டு இலக்க எண்களை, பத்தின் தொகுப்பை 2 நிமிடம் 35.41 வினாடிகளில் பெருக்கி முடித்தார். இது குறித்து ஆர்யன் கூறுகையில், “போட்டிகளில் தயாராவதற்கு முன் பயிற்சி அவசியம் என்பதால், நாள்தோறும் மனக் கணக்கு தொடர்பாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறேன். ''போட்டிகளில் அமைதியாக கவனம் செலுத்த யோகா மற்றும் தியானம் எனக்கு உதவுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthik
பிப் 21, 2025 15:21

வாழ்த்துக்கள் மிஸ்டர் கால்குலேட்டர்..


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 21, 2025 11:55

டிவி கூட இது போன்ற நல்ல விஷயங்களை ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் நமது டிவிக்கள் பால் மனம் மாற சின்னஞ் சிறிய சிறுவர்கள் சிறுமிகளை வைத்து காதல் பாடல்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் பாட வைத்து ரியாலிட்டி ஷோ நடத்தி கொண்டு உள்ளது. அதிலும் காதலன் காதலி போல உடை அணிவித்து பாட வைக்கிறார்கள். அதிலும் மூன்று கழுதை வயதான பெண்ணுடன் சிறுவனையும் நான்கு கழுதை வயதான ஆணுடன் சிறுமியையும் இணைத்து பாட வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதனினும் கொடுமை அந்த சிறுவர் சிறுமியர் தாய் தந்தையர் தங்கள் குழந்தை ஏதோ இமாலய சாதனை படைத்தது போல் கண்களில் கண்ணீர் விட்டு மனம் கசிவது. காசுக்காக எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணம் நம் மக்களிடையே வந்து விட்டது. இனி இந்த எண்ணம் மாறுவது மிகவும் கடினம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை