கர்நாடகாவில் பட்டப்பகலில் துணிகரம்: நகைக்கடையில் 3 கிலோ நகை கொள்ளை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கலபுரகி: பட்டப்பகலில் தங்க நகைக்கடையில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 3 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.கர்நாடக மாநிலம், கலபுரகி நகரின் சராப் பஜார், பரபரப்பான வர்த்தக பகுதியாகும். இங்குள்ள வர்த்தக மையத்தின், முதல் மாடியில், 'மாலிக் ஜுவல்லர்ஸ்' என்ற தங்க நகைக்கடை உள்ளது.நேற்று மதியம் 12:30 மணியளவில், உரிமையாளர் கடையில் இருந்தார். அப்போது திடீரென முகமூடி அணிந்த நான்கு மர்ம நபர்கள், நகைக்கடைக்குள் நுழைந்தனர்.கடை உரிமையாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, லாக்கரை திறக்க வைத்தனர். கிட்டத்தட்ட 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அதன்பின் உரிமையாளரை கட்டிப்போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பினர்.உரிமையாளரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடை உரிமையாளர் கட்டப்பட்டிருப்பதை கண்டு, அவிழ்த்துவிட்டார்.உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், சம்பவ இடத்தை பார்வைஇட்டனர்.மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கை ரேகை நிபுணர்கள், தடயவியல் வல்லுநர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.