உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதிக்க துடிக்கும் பெண்களின் வழிகாட்டி அவேக் தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை

சாதிக்க துடிக்கும் பெண்களின் வழிகாட்டி அவேக் தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். பெண்கள் வீட்டிலேயே அடைபட்டிருந்த காலம் கடந்து, இன்றைக்கு பல துறைகளிலும் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற சாதனை பெண்களை பார்த்து, கிராமத்தில் இருக்கும் பெண்கள், நாமும் சாதனைப் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஏக்கம் வருவது இயல்பு. ஆனால், பலரும் தங்கள் இலக்கை அடைய, என்ன செய்வது என்பது தெரியாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு வழிகாட்டி இருக்க வேண்டும்.

40 ஆண்டுகள்

கர்நாடகாவில் 40 ஆண்டுகளாக, லட்சக்கணக்கான பெண்களின் வழிகாட்டியாக திகழ்ந்து வரும் அமைப்பு தான், 'அவேக்' எனும் கர்நாடகா பெண் தொழில் முனைவோர் சங்கமாகும். இந்த அமைப்பு, ஆயிரக்கணக்கான பெண்களை, தொழில் முனைவோர்களாக மாற்றி, அழகு படுத்தி உள்ளது.இந்த அமைப்பு, ராஜாஜிநகர் தொழிற்பேட்டையில், மதுரா சத்திரபதி என்பவரால், 1983ல் துவங்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளனர். இந்த அமைப்பின் மூலம், இதுவரை 75,000 பெண்கள், தொழில் முனைவோர்களாக உயர்ந்து உள்ளனர். 25 லட்சம் பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பெண்களுக்கு கைத்தொழில் கற்று கொடுக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு மாதமும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களிடம், தொழில் முனைவோர் ஆவது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பொருளாதார அளவில் பெண்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதே இந்த அமைப்பின் தனி சிறப்பு.இந்த அமைப்பில் பெண்கள் உறுப்பினராக ஆகலாம். எதிர்காலத்தில் குழுவுடன் சேர்ந்து பயணிக்கலாம், தொழில் சம்பந்தமான பிரச்னைகள் தீர, இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும். கல்லுாரி பெண்கள் சிலர் விருப்பப்பட்டு, சேவை புரிகின்றனர்.இந்த அமைப்புக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.பெண்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. அதை சரியாக பயன்படுத்தினால் அனைவரும் தொழில் முனைவோரே. கிராமங்களில் பெண்ணுக்கு பயிற்சி அளிக்கும் போது, அவரது கணவர் அனுமதிக்க மாட்டார். இது குறித்து, பேசி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்டுத்துகிறோம். பெண்கள் தைரியமாக வீட்டை விட்டு வெளிவந்து, அவர்களின் கனவை நனவாக்க வேண்டும். எளிதாக எதுவும் கிடைக்காது; கடினமாக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பெண்கள் பொருளாதார ரீதியாக உயரும் போது, எந்த முடிவையும் சுயமாக எடுக்கும் சக்தி கிடைக்கிறது. --ஜெகதீஸ்வரி, செயலர், அவேக் - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை