உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எருமேலியில் பேட்டை துள்ளல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு திருவாபரணம் இன்று புறப்படுகிறது

எருமேலியில் பேட்டை துள்ளல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு திருவாபரணம் இன்று புறப்படுகிறது

சபரிமலை:எருமேலியில் நடந்த அம்பலப்புழா , - ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாபரணம் இன்று பந்தளத்தில் இருந்து புறப்படும் நிலையில் சபரிமலையில் சுத்திகிரியைகள் தொடங்குகிறது.சபரிமலையில் மகரஜோதி தரிசனம் ஜன.14 ல் நடப்பதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்படுகின்றன. மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் நடைபெறும் அம்பலப்புழா,- ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை பார்த்ததும் எருமேலி சிறிய சாஸ்தா கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையுடன் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளி புறப்பட்டனர். இவர்கள் வாவர் பள்ளிவாசலை வலம் வந்த பின்னர் பேட்டை துள்ளியபடி எருமேலி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர்.இதுபோல மதியம் 3:00 மணிக்கு ஆகாயத்தில் ஒளிவிட்டு பிரகாசித்த நட்சத்திரத்தை பார்த்ததும் ஆலங்காடு பக்தர்கள் குழுவினர் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர். 'சுவாமி திந்தகத்தோம்... ஐயப்ப திந்தகத்தோம்' என்ற கோஷத்தால் எருமேலி நேற்று திணறியது. ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இதனுடன் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெற்றது.

இன்று திருவாபரண பவனி

பந்தளத்திலிருந்து திருவாபரண பவனி இன்று மதியம் 1:00 மணிக்கு புறப்படுகிறது. பந்தளம் அரண்மனையில் உள்ள திருவாபரணங்கள் இன்று அதிகாலை முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். மதியம் 12:30 மணிக்கு உச்ச பூஜை நடந்ததும் பேடகங்கள் அடைக்கப்பட்டு தலைசுமையாக பவனியாக புறப்படும். சுவாமிக்கு அணிவிக்க இது ஜன.14 மாலை சன்னிதானம் வந்தடையும்.மகரஜோதிக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் சுத்திகிரியைகள் இன்று துவங்குகிறது. மாலை 6:30 மணிக்கு தீபாராதனைக்கு முன்னதாக பிராசாத சுத்தி பூஜைகளை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் நடத்துவார். நாளை மறுநாள் மதியம் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை