உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிவாரண ஹெலிகாப்டர் வெள்ளத்தில் தரையிறங்கியது

நிவாரண ஹெலிகாப்டர் வெள்ளத்தில் தரையிறங்கியது

பாட்னா, பீஹாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீஹாரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நம் விமானப் படைக்கு சொந்தமான விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாயிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அங்குள்ள தர்பாங்கா விமானத் தளத்தில் இருந்து சென்ற ஏ.எல்.ஹெச்., துருவ் வகை ஹெலிகாப்டர் ஒன்று, முசாபூர் மாவட்டம் நயா காவுன் பகுதியில் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது, இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த விமானி, வெள்ளம் நிறைந்த பகுதியில் வலுக்கட்டாயமாக அதை தரையிறக்கினார். தண்ணீரில் மூழ்கிய ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேரை உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர், பேரிடர் மீட்புப் படையினர் உதவியுடன் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவலை உறுதி செய்த விமானப் படை, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
அக் 03, 2024 05:35

உதவிக்குப்போன இடத்தில ஒருவருக்கும் சேதம் இல்லை என்பது மகிழ்ச்சி. ஓட்டை உடைசல் ஹெலிகாப்டர்களை குப்பையில் போட்டு புதிதாக வாங்கவேண்டும்.


J.V. Iyer
அக் 03, 2024 05:06

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.


முக்கிய வீடியோ