ரூ.2 கோடியில் பாரம்பரிய பூங்கா சாந்தினி சவுக்கில் அமைகிறது
புதுடில்லி,:சாந்தினி சவுக்கில் இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய பாரம்பரிய பூங்கா அமைக்கப்படுகிறது. இதுகுறித்து, கட்டடக் கலைஞர் கமலேஷ்வர் கூறிதாவது:டில்லி மாநகராட்சியின் பாரம்பரிய பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் டில்லியின் பழமையான மார்க்கெட்டுகளில் ஒன்றான மீனா பஜார் அருகே உள்ள சாந்தினி சவுக் பாரம்பரிய பூங்காவில் பழமை மாறாமல் புதிய பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. பூங்காவைச் சுற்றி உறுதி வாய்ந்த சுற்றுச் சுவர் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. சுவரில் பழங்கால ஜாலி வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன.மேலும் இந்தப் பூங்காவில் முகலாய பாணி 'பரதாரி' மற்றும் முந்தைய பூங்காவைப் போலவே ஏராளமான மலர்கள் வளர்க்கப்படும். மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தில், மற்றொரு பாரம்பரிய பூங்கா 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் 6,582 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்கா நேதாஜி சுபாஷ் மார்க்கிலிருந்து ஜூம்மா மசூதி செல்லும் சாலையில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிக்கு 2.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.