உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதாரண மனிதனுக்கு கிடைத்த வெற்றி : பா.ஜ., உட்பட பல தரப்பும் வரவேற்பு

சாதாரண மனிதனுக்கு கிடைத்த வெற்றி : பா.ஜ., உட்பட பல தரப்பும் வரவேற்பு

புதுடில்லி : ''அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, சாதாரண மனிதனின் வெற்றி. முதிர்ச்சியான பார்லிமென்டரி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி'' என, பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

காந்தியவாதி அன்னா ஹசாரேவின் போராட்டம், வெற்றிகரமாக முடிவடைந்ததை, ராம்லீலா மைதானம் துவங்கி, அவரது சொந்த கிராமமான ராலேகான் சித்தி கிராமம் வரை, நாடு முழுவதும் மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர். நேற்று காலை 10.20 மணியளவில், ஹசாரே தன் போராட்டத்தை நிறைவு செய்த போது, ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்த, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பெருங்கூச்சலிட்டு, ஆரவாரம் செய்தனர். பலர், தேசியக் கொடிகளை ஏந்தியபடி, நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட, ரிதி போரா என்ற இளைஞர் கூறுகையில், ''இது மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன், ஜனநாயகத்தின் வெற்றி. இந்தப் போராட்டத்தில், பெருமளவு மக்கள் பங்கெடுக்கக் காரணம், அவர்கள் அனைவரும் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தான்'' என்றார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், இதுகுறித்து கூறியதாவது: ராம்லீலா மைதானத்தில் நடந்தது, வெறும் நடுத்தர மக்களின் போராட்டம் மட்டுமல்ல. இப்போராட்டம், மிகப்பெரிய இயக்கமாக உருவெடுக்க, நாடு முழுவதும் உள்ள கிராம மக்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். இது ஒரு சாதாரண மனிதனின் கோரிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இதுபோன்ற போராட்டங்கள், நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு வித்திடக் கூடியவை. நேற்று முன்தினம், பார்லிமென்டில் நடந்த விவாதத்தால், ஒட்டுமொத்த நாடே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இது தான், ஜனநாயகத்தின் வலிமை. இவ்வாறு, பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறுகையில்,'அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு, பா.ஜ., தொடர்ந்து ஆதரவு அளிக்கும். நாட்டு நலனுக்கு, அன்னா நீண்ட நாட்கள் வாழ வேண்டியது அவசியம். தற்போதைய சூழலில், அவரது உடல் நலன் தான் முக்கியம். பார்லிமென்டுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, அன்னா ஹசாரேயை கைவிட மாட்டோம்' என்றார்.

வெற்றிப் பாடல்கள் இசைப்பு: ஹசாரேவின் சொந்த கிராமமான ராலேகான் சித்தி கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. வெற்றிப் பாடல்கள் இசைக்கப்பட்டன. உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், ''வெற்றி நாயகனுக்காக, காத்திருக்கிறோம். அவர், கிராமம் திரும்பும்போது, மிகப்பெரிய வரவேற்புக்கு, ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றார்.

மும்பை நகரில், கடும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் வெள்ளமென திரண்டு, ஆரவாரம் செய்தனர். அங்குள்ள ஆசாத் மைதானத்தில், காந்தி குல்லாய்கள் அணிந்தபடி, நூற்றுக்கணக்கில் திரண்ட மக்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குஜராத் மாநிலத்திலும், பல்வேறு இடங்களில் மக்கள் விழாக்கோலம் பூண்டனர்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தன் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றதை, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா நகரம் முழுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

கோல்கட்டா நகரின் தெருக்களில், நூற்றுக்கணக்கில் திரண்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள், தேசியக் கொடிகள் ஏந்தியபடி, தேசிய கீதம் இசைத்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கட்சியின் மாநிலச் செயலர் பிமன் போஸ், இதுகுறித்து கூறுகையில், ''பலமான லோக்பால் மசோதா வேண்டும் என்ற ஹசாரேயின் கோரிக்கையை, நாங்கள் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்'' என்றார்.

வாத்தியங்கள் இசைப்பு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலும், மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர் உட்பட பல இடங்களில், அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள், கார்கள், மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒடிசா மாநிலம் முழுவதும், பல இடங்களில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், வாத்தியங்கள் இசைத்தபடி நடனமாடியும், மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் வந்தனர். புவனேஷ்வர், கடாக், பெர்ஹாம்பூர், சாம்பல்பூர், பலாங்கிர், பர்கார், ரூர்கெலா மற்றும் பலாசூர் உட்பட, பல இடங்களில் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்தன.

சிக்கிம் மாநிலத்தில், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த, யோங் டெஷரிங் லெப்சா என்ற விவசாயி, தன் போராட்டத்தை நிறைவு செய்தார். இந்தப் போராட்டத்தில், அவரது உடல் எடை 14 கிலோ குறைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை