மேலும் செய்திகள்
சிலம்பத்தில் காஞ்சிக்கு தங்கம்
12-Nov-2024
ஜிம்னாஸ்டிக்கில் நடந்த சிறு தவறால், முதுகெலும்பு முறிந்தும், மனம் தளராமல், பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் களமிறங்க தீவிர பயிற்சி மேற்கொண்டு, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் ஆனந்தராவ்.மைசூரு நகரை சேர்ந்தவர் பாபுராவ் - லட்சுமி பாய் தம்பதி. பாபுராவ் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர்களின் மகன் ஆனந்தராவ், 33. சிறுவயதில் விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்தார். இதனால், 4 வயதிலேயே, மஹாராஜா விபஜிதா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்று வந்தார். மெடல்கள்
மாநிலம், தென் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், ஜிம்னாஸ்டிக்கில், நுாற்றுக்கணக்கான மெடல்களை வாங்கி குவித்துள்ளார். தென் மாநிலங்கள் ஜூனியர் பிரிவில், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு கண்டார்.பள்ளி படிப்பை முடித்த பின், மஹாராஜா கல்லுாரியில், பி.காம்., படித்து வந்தார். கடந்த 2010ல் தசரா நிகழ்ச்சிக்காக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பங்கேற்றார்.'புளோர் எக்சைஸ்' பிரிவில், அவர் செய்த சிறு தவறால், கீழே விழுந்தபோது, அவரின் முழு உடல் எடையும் கழுத்து பகுதி தாங்கியது. இதனால் அவரின் முதுகெலும்பு முறிந்தது. அவரின் ஒலிம்பிக் கனவு, கனவாகவே கரைந்தது. இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனை, வீடு என சக்கர நாற்காலியில் காலத்தை கடத்தினார். குறிக்கோள்
ஆனாலும், விளையாட்டில் சாதிக்க வேண்டும்; நாட்டுக்கு பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்ற குறிக்கோள், சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்தது.சாதாரண விளையாட்டு வீரராக இல்லாமல், பாரா விளையாட்டு வீரராக களமிறங்க முடிவு செய்தார். இதற்காக ஐந்து ஆண்டு தொடர்ந்து, பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டார். இதன் பலனாக, 2018ல் மாநில அளவிலான பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்.அதை தொடர்ந்து ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றவர், 2019, 2021, 2022ல் சர்வதேச பாரா தடகள போட்டிகளில், இந்தியாவின் சார்பில் விளையாடினார்.தேசிய அளவிலான போட்டிகளில், 'கிளப் த்ரோ' எனும் மரக்கட்டையை துாக்கி வீசுதல், தட்டு எறிதல் போட்டிகளில் முறையே மூன்று வெள்ளி, ஒரு தங்கப்பதக்கம் பெற்றார்.அடுத்தாண்டு நடக்க உள்ள பாரா ஒலிம்பிக்கில், டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரில் தங்கி, பயிற்சி பெற்று வருகிறார். - நமது நிருபர் -
12-Nov-2024