உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாலன்பூர்; குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 21 பேர் உயிரிழந்தனர்.குஜராத்தில் பானாஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகரில் உள்ள தொழிற்பேட்டையில் பட்டாசு தொழிற்சாலையும், அதன் கிடங்கும் அமைந்துள்ளன.

பேரிடர் மீட்புப்படை

இங்கு, நேற்று காலை தொழிலாளர்கள் பணியாற்றினர். அப்போது, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அங்குள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி தப்பி ஓடினர். இந்த விபத்து காரணமாக பட்டாசு தொழிற்சாலை கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில், பல தொழிலாளர்கள் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.இதைத்தொடர்ந்து, கட்டட இடிபாடுகளில் சிக்கிய நபர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி, 21 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஆறு பேர் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலா ரூ.50,000

முதற்கட்ட விசாரணையில், பட்டாசு கிடங்கில் உள்ள பாய்லர் வெடித்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. எனினும், இந்த வெடிவிபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான தொழிலாளர்கள் அனைவரும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பூபேந்திர படேல், பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடும், வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை