காங்.,கில் இணையும் அ.தி.மு.க.,வினர்
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை அ.தி.மு.க., செயலர் ரங்கசாமி தலைமையில் பலரும் காங்கிரசில் சேருகின்றனர்.இது குறித்து, ரங்கசாமி கூறியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த போதே பங்கார் பேட்டையில் அ.தி.மு.க., உருவானது. கோலார் மாவட்டத்தில் தங்கவயலுக்கு அடுத்து அதிக தமிழர்கள் நிறைந்த தொகுதி பங்கார்பேட்டை தான். இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இங்குள்ள டவுன் சபையிலும் அ.தி.மு.க.,வினர் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர்.பங்கார்பேட்டையில் உள்ள தமிழர்களுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க., தலைமை தான் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருந்து வந்தோம். ஆனால், தமிழகத்தில் பொறுப்பான தலைமை இல்லை. தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. அ.தி.மு.க., வினர் மூன்று பிரிவுகளாக இருப்பதால், அவர்கள் ஒன்றுபட போவதில்லை.இனி பங்கார் பேட்டையில் உள்ள அ.தி.மு.க.,வினர் இக்கட்சியில் நீடிக்க விருப்பமில்லை. பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, மொழி பாகுபாடின்றி அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார்.அவரின் அழைப்பின்படி அ.தி.மு.க.,வை விட்டு விலகி காங்கிரசில் இணைய உள்ளோம். இதனால், பங்கார்பேட்டையில் அ.தி.மு.க., என்ற கட்சி இருக்காது. அனைவருமே காங்கிரசில் இணைய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.