UPDATED : ஜூன் 13, 2025 05:35 AM | ADDED : ஜூன் 12, 2025 06:57 PM
புதுடில்லி: ஆமதபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்காக டில்லி மற்றும் மும்பையில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்தமருத்துவ கல்லூரி விடுதி மீதும் விழுந்தது. இதில் மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்தனர்.இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உயிரிழந்த பயணிகள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களின் உறவினர்களுக்காக டில்லி மற்றும் மும்பையில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படும். டில்லி மற்றும் மும்பையில் காத்திருக்கும் உறவினர்கள், 1800 5691 444 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெளிநாடுகளில்இருந்து வந்து, அங்கு செல்ல காத்திருப்பவர்கள், +91 8062779200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.சிறப்பு குழு
விபத்தை தொடர்ந்து, ஆமதாபாத்திற்கு ஏர் இந்தியாவின் சிறப்பு குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் உள்ள ஏர் இந்தியா குழுவினருக்கு அவர்கள் உதவுவார்கள் என அந்த நிறுவவனம் அறிவித்து உள்ளது.மீட்புப் பணியில் ராணுவம்
இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோருக்கு உதவி செய்ய 130 பேரை அனுப்பிவைத்துள்ளோம். இந்த குழுவில் இடிபாடுகளை அகற்றும் ஜேசிபி குழுவினர், மருத்துவக் குழுவினர், அதிவிரைவு குழுவினர், தீயை அணைக்கும் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பொறியியல் குழுவினர் உதவி வருகின்றனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.