ஆகாசா விமான டிக்கெட் விலையும் அதிகரிப்பு
புதுடில்லி: 'ஏர் இந்தியா, இண்டிகோ' விமான நிறுவனங்களை தொடர்ந்து, 'ஆகாசா' நிறுவனமும் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலகம் முழுதும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக விமான எரிபொருள் விலை தொடர் உயர்வை சந்தித்ததால், 'ஏர் இந்தியா' மற்றும் 'இண்டிகோ' விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணங்களை உயர்த்தின. அந்த வரிசையில் தற்போது, 'ஆகாசா' விமான நிறுவனமும் இணைந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: விமான எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் வகையில், எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 199 முதல் 1,300 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயர்வு உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு பொருந்தும். இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை, வினியோகத் தடங்கல்களால் மார்ச் மாத துவக்கத்தில் இருந்து, விமான இயக்கச் செலவில் 40 சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை ஈடுகட்டும் வகையில், விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன.