விமான கண்காட்சி எதிரொலி கிரேன் உயரம் குறைக்க உத்தரவு
பெங்களூரு: பெங்களூரில் அடுத்த மாதம் விமான கண்காட்சி நடக்க இருப்பதை ஒட்டி, எலஹங்கா விமான படை தளத்தை சுற்றி 10 கி.மீ., துாரத்தில் உயரமாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் பணிக்கு பயன்படுத்தப்படும் கிரேன் உயரத்தை குறைக்க, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமான படை தளத்தில், மத்திய ராணுவ அமைச்சகம் சார்பில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, விமான கண்காட்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை:எலஹங்கா விமான படை தளத்தில், அடுத்த மாதம் விமான கண்காட்சி நடக்க உள்ளதால், பிப்ரவரி 1 முதல் 14ம் தேதி வரை, விமான படை தளத்தில் இருந்து 10 கி.மீ.,க்குள் ராட்சத கிரேனை பயன்படுத்தி உயரமாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் உரிமையாளர்கள், கிரேனின் உயரத்தை குறைத்து கொள்ள வேண்டும். இதை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சட்டம் 2020 மற்றும் இந்திய விமான சட்டம் 1937 விதி 91ன் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.