நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என்ற கவுரவமான பதவியில் இருக்கும் ராகுல், 2014 முதல் உண்மை இல்லாத விஷயங்களை, மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்யும் வேலையை தீவிரமாக தொடர்ந்து வருகிறார். லேட்டஸ்ட்டாக, 'ஓட்டு திருட்டு' என்று சொல்லி, தேர்தல் கமிஷனுக்கும் பா.ஜ.,வுக்கும் எதிராக ராகுல் கிளப்பிய விவகாரமும் பொய் என, அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி அவர் வெளிப்படுத்தி, அவை பொய் என நிரூபிக்கப்பட்ட தகவல்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.மோடி பிரதமராக பதவியேற்ற, 2014 முதல், பா.ஜ., அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நடத்தி வருகிறார்.
1 பண மதிப்பிழப்பு
ராகுல் செய்தது: 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை, 'ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் மீதான தாக்குதல்' என, கடுமையாக விமர்சித்த ராகுல், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தினார். இதனால், இந்திய பொருளாதாரம் அழியும் என்றும், 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை இந்தியாவில் வெற்றி பெறாது என்றும் தொடர் பிரசாரம் செய்தார்.நடந்தது: ஆறு மாதங்களில் பண பரிமாற்றம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தெருவில் கீரை விற்கும் பெண் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினர்.
2. ரபேல் போர் விமான ஒப்பந்தம்
ராகுல் செய்தது: பிரான்சிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில், மோடி ஊழல் செய்ததாக, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், மிகப்பெரிய பிரசாரத்தை ராகுல் முன்னெடுத்தார். 'காவல்காரனே திருடன்' என்ற அவரது முழக்கம் பெரிதாக பேசப்பட்டது.நடந்தது: 2019 லோக்சபா தேர்தலில், ராகுலின் ரபேல் ஊழல் பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அமேதி தொகுதியில் ராகுலே தோல்வி அடைந்தார். 'ரபேல் விவகாரத்தில், பிரதமர் மோடியை திருடன் என, உச்ச நீதிமன்றமே கூறி விட்டது' என, ராகுல் பிரசாரம் செய்தார். இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் ராகுல் மன்னிப்பு கேட்டார்.
3 வேளாண் சட்டங்கள்
ராகுல் செய்தது: மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ஓராண்டுக்கும் மேலாக, டில்லி எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதை நாடு தழுவிய பிரசாரமாக ராகுல் மாற்றினார்.நடந்தது: மூன்று வேளாண் சட்டங்களையும், பிரதமர் மோடி திரும்பப் பெற்றார். ஆனாலும், அதன் பலன் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. 2022ல் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., வென்றதும், இப்பிரச்னை குறித்து பேசுவதை ராகுல் கைவிட்டார். பஞ்சாபில் பலமிக்க கட்சியாக இருந்த காங்கிரஸ், கடந்த 2022ல் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அதாவது, ராகுல் பிரசாரத்தை பஞ்சாப் விவசாயிகளும் மக்களும் ஏற்கவில்லை.
4 சீன எல்லை பிரச்னை
ராகுல் செய்தது: 2022 செப்டம்பரில், 'பாரத் ஜோடோ' யாத்திரை மேற்கொண்ட ராகுல், 'எல்லையில் 2000 சதுர கி.மீ., நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. சீன ஆக்கிரமிப்பை மோடியால் தடுக்க முடியவில்லை' என தொடர் பிரசாரம் செய்தார். பார்லிமென்டிலும் பேசினார்.நடந்தது: சீன ஆக்கிரமிப்பு குறித்த ராகுலின் பிரசாரம் பிசுபிசுத்தது. சரத்பவார் போன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களே, இது எடுபடாது என்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் இப்படி பொறுப்பின்றி பேசக்கூடாது' என, ராகுலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.5 அதானி, அம்பானி
ராகுல் செய்தது: இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களான அதானி, அம்பானிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுவதாக, 2014 முதலே ராகுல் பேசி வருகிறார். இதை நாடு தழுவிய பிரசாரமாகவும் முன்னெடுத்தார். அதானியுடன் மோடி இருக்கும் படத்தை, பார்லிமென்டில் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.நடந்தது: காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளும் மாநிலங்களிலேயே, அதானி, அம்பானி நிறுவனங்கள் முதலீடு செய்தன. குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பலர், 'குஜராத்தின் பெருமித அடையாளமாக இருக்கும் அதானி, அம்பானியை எதிர்த்தால், எப்படி கட்சியை வளர்க்க முடியும்?' எனக்கூறி, காங்கிரசிலிருந்து வெளியேறினர்.எந்த நாட்டு தலைவரும் வற்புறுத்தவில்லை. இந்தியாவின் பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் தான் போரை நிறுத்த அணுகியது என்றார். இந்த விவகாரத்தில் ராகுல் கூறிய அனைத்தும் தவறான தகவல்கள் என்பதை மோடி விவரித்தார்.
6 தேர்தல் பத்திரங்கள்
ராகுல் செய்தது: தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையை கடுமையாக விமர்சித்த ராகுல், 'பிரதமர் மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம். கமிஷன் பெறுவதற்கான வழிதான் தேர்தல் பத்திரங்கள்' என்றார். இதை நாடு முழுதும் பேசுபொருளாக்கினார்.நடந்தது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனாலும், இந்த விவகாரம் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.7 ஜி.எஸ்.டி., அமல்
ராகுல் செய்தது: 2017ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., வரியால், வணிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதை பா.ஜ.,வுக்கு எதிரான ஆயுதமாக கையிலெடுத்த ராகுல், 'ஜி.எஸ்.டி., என்பது பொருளாதார அநீதி' என, கடுமையாக விமர்சித்தார்.நடந்தது: துவக்கத்தில் ஜி.எஸ்.டி., எதிர்ப்பு இருந்தாலும், அதற்கு சிறு வணிகர்கள் உட்பட அனைவரும் பழகி விட்டனர். இதனால், அரசின் வருவாய் அதிகரித்தது.8. குடியுரிமைச் சட்டம்
ராகுல் செய்தது: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய மத சிறுபான்மையினரான ஹிந்து, சீக்கியர், பவுத்தர், கிறிஸ்தவர், சமணர், பார்சி உள்ளிட்ட மதத்தினருக்கு, இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை, 2019ல் மோடி அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்ற சதி என, ராகுல் பிரசாரம் செய்தார். நாடெங்கும் தொடர் போராட்டங்கள் நடந்தன.நடந்தது: இச்சட்டம் அமலுக்கு வந்து, எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்திய குடியுரிமை உள்ள யாரும் வெளியேற்றப்படவில்லை. இதனால், இந்த போராட்டமும் பிசுபிசுத்தது.9. ஜாதிவாரி கணக்கெடுப்பு
ராகுல் செய்தது: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, ராகுல் குரல் கொடுத்தார். கர்நாடகா, தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, காங்கிரஸ் அரசு நடத்தியது.நடந்தது: நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அறிவித்து, ராகுலின் இந்த போராட்டத்தை, பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்தார்.10. ஆப்பரேஷன் சிந்துார்
ராகுல் செய்தது: காஷ்மீரில், 26 இந்திய சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.தான் சொல்லிதான் போர் நிறுத்தம் நடந்ததாக, அமெரிக்க அதிபர் டிரம்பர் கூறினார். இதைவைத்து, 'பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அடிபணிந்து விட்டார். நமது போர் விமானங்களை இழந்து விட்டோம்' என, ராகுல் குற்றம்சாட்டினார்.நடந்தது: ராகுலின் கோரிக்கையை ஏற்று, இது தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடந்தது.அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, 'போர் நிறுத்தத்தை, எந்த நாட்டு தலைவரும் வற்புறுத்தவில்லை. இந்தியாவின் பதிலடிக்கு தாக்குப்பி டிக்க முடியாமல், பாகிஸ்தான் தான் போரை நிறுத்த அணுகியது' என்றார்.இந்த விவகாரத்தில் ராகுல் கூறிய அனைத்தும் தவறான தகவல்கள் என்பதை, மோடி விவரித்தார். அதன்பின், இதுபற்றி பேசுவதை ராகுலே நிறுத்தி விட்டார்.11 ஓட்டு திருட்டு புகார்
ராகுல் செய்தது: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேர்தலில் குறிப்பாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக, ராகுல் குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடகாவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, ராகுல் குற்றம்சாட்டினார். இதை வைத்து, 'இண்டி' கூட்டணி கட்சியினர், பார்லிமென்டை முடக்கி வருகின்றனர்.நடந்தது: பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக, ராகுல் கூறியது அனைத்தும் தவறானவை என, தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, அடுத்த பிரச்னைக்கு ராகுல் சென்று விட்டார்.கர்நாடகாவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, ராகுல் கூறியதற்கு ஆதாரம் கேட்டு, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். 'காங்கிரஸ் ஆட்சியில் தானே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது?' என கேட்ட கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.,வை வீழ்த்த ராகுல் எடுத்த ஆயுதம், ராஜண்ணா பதவியை பறித்து விட்டது.இப்படி மோடி அரசுக்கு எதிராக, ராகுல் முன்னெடுத்த அனைத்து போராட்டங்களும் தோல்வியில் முடிந்துள்ளன. ராகுல் எதற்காக போராடினாரோ, அவற்றில் பலவற்றை செயல்படுத்தியும், மற்றவைகளில் ராகுல் கூறிய பொய்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியும், பிரதமர் மோடி முறியடித்துள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே' என்ற சினிமா வசனம் போல, ராகுலின் நிலைமை ஆகி விட்டதாகவும் பா.ஜ.,வினர் கேலி செய்கின்றனர்.- நமது நிருபர் -