ராஜஸ்தானில் எதிரொலித்த திருப்பதி லட்டு விவகாரம்: பிரபல கோவில் பிரசாதங்கள் சோதனை செய்ய முடிவு
ஜெய்ப்பூர்: திருப்பதி லட்டு விவகாரத்தின் எதிரொலியாக, ராஜஸ்தானில் புகழ்பெற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில், ஏழுமலையான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்தது. பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்தில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பது ஆய்வு செய்ய, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் புனிதத்தை உறுதி செய்ய, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை மாநிலத்தின் பல பிரபலமான கோவில்களில் அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற 14 கோவில்கள் உள்ளன. இந்த வரிசையில் புகழ்பெற்ற கணேஷ் கோவில் மற்றும் ஸ்ரீநாத்ஜி கோயில் ஆகியவை அடங்கும். இங்குள்ள கோவில்களில் வழங்கப்படும் கோவில் பிரசாதங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) பி.எச்.ஓ.ஜி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளது.