உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டி; 82 வயதிலும் முடங்காத சுறுசுறுப்பு

கிராமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டி; 82 வயதிலும் முடங்காத சுறுசுறுப்பு

நமது நிருபர்

இன்றைய காலத்தில், சில இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தங்களின் வேலையை செய்து கொள்வதே, பெரிய விஷயமாக இருக்கும். ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரை எதிர்பார்ப்பர். சோம்பேறித்தனமாக நடந்து கொள்வர். ஆனால், 82 வயது மூதாட்டி, சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.பெலகாவி, அதானியின் சம்பரகி கிராமத்தில் வசிப்பவர் சோனாபாய் பாண்டுரங்கா சத்ரே, 82. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி மருமகள்கள் உள்ளனர். பேரப்பிள்ளைகள் நிறைந்த கூட்டு குடும்பம் இவருடையது. சோனாபாய் தோற்றத்தை பார்த்தால், பரிதாபமாக இருக்கும். சாயம் போன பழைய சேலை, காலில் செருப்பு இல்லை. எங்கு சென்றாலும், வெறுங்காலில் நடந்து செல்வார்.இவரை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். மனநிலை சரியில்லாதவர் என, பலரும் நினைத்தனர்; பரிதாபம் காட்டினர். ஆனால் இவர் செய்யும் செயலை பார்த்து, ஆச்சரியமடைந்து கை கூப்பி வணங்குகின்றனர். தினமும், கிராமத்தை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். துப்புரவு தொழிலாளர்களுக்காக காத்திருப்பது இல்லை. வீதி, வீதியாக சுற்றி வந்து கடைகள், வீடுகளின் முன்பாக விழுந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கூடையில் சேகரிக்கிறார். ஊருக்கு வெளியே கொண்டு வந்து பள்ளத்தில் போடுகிறார். கிராமத்தை துாய்மையாக வைத்திருப்பதில், இவருக்கு உள்ள ஆர்வம், அக்கறை மற்றவருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.இன்று, நேற்று அல்ல 40 ஆண்டுகளாக, சோனாபாய் இத்தகைய பொது சேவையில் ஈடுபடுகிறார். அது மட்டுமின்றி, தெரு நாய்களுக்கும், பசுக்களுக்கும் உணவளிக்கிறார். கிராமத்தை சுத்தம் செய்யும் இவருக்கு, உள்ளாட்சி சார்பில் ஊதியம் எதுவும் வழங்குவது இல்லை. இலவசமாக கிராமத்தை சுத்தம் செய்கிறார். துாய்மை குறித்து கிராமத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.வயதை காரணம் காண்பித்து திண்ணையில் அமர்ந்து, பொழுது போக்காமல் தன்னால் முடிந்த வரை சமூக சேவை செய்ய வேண்டும் என, குறிக்கோளுடன் வாழும் சோனாபாய்க்கு ஒரு சல்யூட் அடிக்கலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழன்
மார் 17, 2025 17:13

பாட்டிக்கு பாராட்டுக்கள் இனியாவது இதைப் பார்த்த பின் அரசு விழித்துக் கொள்ளுமா?? பாவம் தள்ளாத வயதிலும் சமூக சேவை செய்வது பாராட்டப்பட்டாலும் இனி துப்புரவு தொழிலாளர்களை கொண்டு அரசு தூய்மை பணியை செய்ய வேண்டும்


Petchi Muthu
மார் 17, 2025 15:57

அருமை அருமை... கடைசி காலம் வரை இந்த பணியை பாட்டி செய்யுமாறு அன்பு கோரிக்கை வைக்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை