உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீவாக மாறிய அடுக்குமாடி குடியிருப்பு; மூழ்கிய 250 வாகனங்கள்

தீவாக மாறிய அடுக்குமாடி குடியிருப்பு; மூழ்கிய 250 வாகனங்கள்

பெங்களூரு எலஹங்காவில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், எலஹங்காவில் உள்ள கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்டோர், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை டிராக்டர்கள் மூலம், மீட்கும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், பெங்களூரு உட்பட மாநிலத்தின் சில பகுதிகளில், கடந்த சில தினங்களாக இரவில், கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு பெங்களூரின் சிவாஜிநகர், வசந்த்நகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், ஸ்ரீநகர், ஜெ.பி.நகர், பசவனகுடி, அஞ்சனபுரா, ஜெயநகர், கூலிகெரே, நாகபுரா, ஹம்பிநகர், பசவேஸ்வராநகர், நாகபுரா.இந்திரா நகர், ஹெச்.ஏ.எல்., மெஜஸ்டிக், சிக்பேட், சாம்ராஜ்பேட், விஜயநகர், கோவிந்தராஜ்நகர், எலக்ட்ரானிக் சிட்டி, எலஹங்கா, கோகிலு கிராஸ், ஷெட்டிஹள்ளி, டி.தாசரஹள்ளி, பீன்யா, ஜக்கூர், ஹெப்பால், சதாசிவநகர், கே.ஆர்.மார்க்கெட் உட்பட நகர் முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது.

டிராக்டரில் மீட்பு

கனமழையால் விமான நிலையம் செல்லும் சாலையில், எலஹங்காவில் உள்ள கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பை, வெள்ளம் சூழ்ந்தது. வாகன நிறுத்தும் இடத்தில், 100க்கும் மேற்பட்ட கார்கள், 150க்கும் மேற்பட்ட பைக்குகள் வெள்ளத்தில் பாதி அளவுக்கு மூழ்கின. குடியிருப்பை சுற்றி 5 அடி உயரத்திற்கு, தண்ணீர் தேங்கி நின்றது.இதனால் குடியிருப்பில் வசித்த மக்கள், எப்படி வெளியே செல்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்தனர். குடியிருப்பில் சிக்கிய மக்களை மீட்க, டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் இணைந்து, மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.வழக்கமாக சொகுசு கார்களில் சென்றவர்கள், கூட்டம், கூட்டமாக டிராக்டர்களில் வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டு, குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். குடியிருப்பின் உயரமான கட்டடங்களில் உள்ள வீடுகளில் வசிப்போர், வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். டிராக்டர்கள் மூலம் அவர்களுக்கு உணவு, கேன் தண்ணீர் வழங்கப்பட்டது.

10 ஏரி தண்ணீர்

நேற்று காலை எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத், கேந்திர விஹார் குடியிருப்புக்கு சென்று பார்வையிட்டார். அவரிடம் மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக, எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.குடியிருப்பில் வசிக்கும் மக்கள் சிலர் கூறுகையில், 'எங்கள் குடியிருப்புக்கு பின்பக்கம், அமானிகெரே ஏரி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது. கனமழைக்கு குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், ஏரி தண்ணீர், சாக்கடை கால்வாய் தண்ணீர் கலந்து, குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போதே பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினோம். இப்போது அமானிகெரே ஏரிக்கு, மேலும் 10 ஏரியில் இருந்து தண்ணீர் வருகிறது. ஏரிக்கரையில் இருந்து 25 அடிக்கு கீழ், குடியிருப்பு அமைந்து உள்ளது.மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தண்ணீர் செல்ல வழி இல்லாமல், சுற்றுச்சுவர் இடிந்து, குடியிருப்பை மீண்டும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குடியிருப்பில் 630 வீடுகள் உள்ளது. 2,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குமுறலை வெளிப்படுத்தினர்.

தப்பிய வாலிபர்

குடியிருப்பில் புகுந்த தண்ணீரை, மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனாலும் நேற்று இரவு வரை, தண்ணீர் முழுமையாக வெளியேறவில்லை. இன்று அல்லது நாளை தான், தண்ணீரை முழுதும் வெளியேற்ற வாய்ப்பு இருக்கிறது.இதனால் குடியிருப்புகளில் வசித்தவர்கள் வேறு பகுதிகளில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து உள்ளனர். குழந்தைகளுக்கு தசரா விடுமுறை விடப்பட்டு உள்ளது. எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று, கனவில் இருந்த குடியிருப்புவாசிகளுக்கு, மழை பெரிய 'ஷாக்' கொடுத்து உள்ளது.பின்னிபேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் 10 அடி உயர காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிவதற்கு முன்பு, வாலிபர் ஒருவர் அப்பகுதியில், பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். அவர் சென்ற 20 வினாடிகளில், சுவர் இடிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பினார். ஒருவேளை அவர் நின்ற போது, சுவர் இடிந்து விழுந்து இருந்தால் உயிரிழந்திருக்க கூட வாய்ப்பு உள்ளது.

சாலை பள்ளம்

கனமழைக்கு மல்லேஸ்வரம் 13 வது கிராசில், சாலையில் பெரிய குழி விழுந்தது. பசவேஸ்வரா நகரில் முதியோர் காப்பகத்தில் தண்ணீர் புகுந்தது. டி.தாசரஹள்ளி புவனேஸ்வரி நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள, வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வீடுகளில் இருந்த அரிசி மூட்டைகள், உணவு பொருட்கள் தண்ணீரில் மூழ்கியதால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் வசித்தவர்கள் பாத்திரங்களில் பிடித்து, மழைநீரை இரவு முழுதும் வெளியே ஊற்றினர். பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகனங்கள் சேதம் அடைந்தன. ஹம்பிநகரில் அதிகபட்சமாக 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நாளை வரை மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால், பெங்களூரு நகரவாசிகள் பீதி அடைந்து உள்ளனர்.

வாகனங்களுக்கு தடை

பெங்களூரில் மழை ஒரு புறம் பெய்ய, இன்னொரு பக்கம் வடமாவட்டங்களான பல்லாரி, விஜயநகராவிலும் கனமழை பெய்து வருகிறது. விஜயநகராவின் ஹொஸ்பேட், ஹகரிபொம்மனஹள்ளி தாலுகாக்களில் மழை வெளுத்து வாங்கியது. ஹகரிபொம்மனஹள்ளி அருகே கனஹோசனஹள்ளி கிராமத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடியது. அந்த பாலத்தில் சென்ற சரக்கு லாரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. டிரைவர் வெளியே குதித்து நீச்சல் அடித்து உயிர் தப்பினார். நேற்று காலை கிரேன் உதவியுடன் லாரி வெளியே எடுக்கப்பட்டது.பல்லாரி டவுனில் பெய்த கனமழையால், கலெக்டர் அலுவலக வளாகம், பழைய தாலுகா அலுவலகம், பள்ளி, கல்லுாரி மைதானங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து உள்ளது. சத்யநாராயணபேட் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.பல்லாரி அருகே சங்கரபந்தே கிராமத்தில் ஓடையில் கார் கழுவ சென்ற சிவா, 37 என்பவர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். நேற்று காலை மரத்தில் அவரது உடல் சிக்கி இருந்தது. தீயணைப்பு படையினர் மீட்டனர். சண்டூரில் பெய்த மழையால், கனிம சுரங்க பகுதிகளுக்கு வந்த லாரிகள் வெள்ளத்தில் சிக்கி கொண்டன. -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி