20 ஆண்டுக்கு முன் நடந்த கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவு
பெங்களூரு: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில், குற்றவாளி யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும்படி, சி.ஐ.டி.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரின் ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில், 2004ல் ஒரு கொலை வழக்குப் பதிவானது. விசாரணை நடத்திய போலீசார், நாராயணபுராவில் வசிக்கும் சல்மான் என்பவரை கைது செய்தனர். இவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வேண்டுகோள்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் சல்மான் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், 'நான் குற்றவாளி அல்ல. என்னை போலீசார், குற்றவாளியாக சித்திரிக்கின்றனர். உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து, விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார்.மனு மீதான விசாரணையில், சல்மான் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹஸ்மத் பாஷா கூறியதாவது:மனுதாரரை போலீசார் 16வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். உண்மையான பெயர் அப்துல் முனாப். அவரது தந்தை பெயர் ஹைதர் அலி. ஆனால் போலீசார், சல்மான் என்பவர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இவரது தந்தை பெயர் சுஹைல் அகமது.போலீசார், சல்மானே உண்மையான குற்றவாளி. சல்மானும், அப்துல் முனாப்பும் ஒரே நபர் என, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். போலீசாரின் அறிக்கை சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. மனுதாரர் சல்மான், அப்துல் முனாப் ஆக முடியாது. எனவே, வழக்கில் வேறொரு அமைப்பு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார். கூடுதல் விசாரணை
அரசு தரப்பில் வாதிட்ட வக்கீல், 'போலீசார் ஏற்கனவே, இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சல்மான், அப்துல் முனாப் இருவரும், ஒரே நபர்தான் என, போலீசார் கூறியுள்ளனர். கூடுதல் விசாரணைக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கலாம்' என்றார்.வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், 'மனுதாரரின் வாதம் ஏற்புடையதே. சல்மானும், அப்துல் முனாபும் ஒரே நபராக இருக்க முடியாது. உண்மையான குற்றவாளி சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார். 'தவறு செய்யாதவர் மீது கொலை குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக, மனுதாரர் தரப்பு வக்கீல் கூறுகிறார். நுாறு குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. 'உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்' என, சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டது.