மேலும் செய்திகள்
பம்பையில் ரூ.300ல் இருமுடி கட்டும் வசதி
23-Nov-2024
சபரிமலை:பம்பை முதல் சன்னிதானம் வரை 106 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வர வேண்டாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வருவது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏராளமான பக்தர்கள் இன்னும் அதை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். தண்ணீரை குடித்த பின்னர் பாட்டில்களை காட்டில் வீசுவதால் அவற்றால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது. எனவே கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை குடிநீர் வாரியம் செய்துள்ளது.அதன்படி பம்பையில் இருந்து சன்னிதானம் வரை உள்ள பாதையில் 106 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக ஒரு மணி நேரத்தில் 35 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஒன்பது ஆர்.ஓ., பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையில் மூன்று, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், சரங்குத்தியில் தலா ஒன்று நீலி மலையில் இரண்டு பிளான்ட்டுகள் உள்ளன.இந்த பிளான்ட்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக பம்பை மற்றும் சரங்குத்தியில் 6 லட்சம் லிட்டர், நீலிமலை மற்றும் அப்பாச்சி மேட்டில் தலா 2 லட்சம் கொள்ளளவு கொண்ட டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக சன்னிதானத்திலும், பம்பையிலும் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குடிநீர் வாரிய ஊழியர்களுடன் 80 தற்காலிக ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதை மற்றும் நிலக்கல்லில் குடிநீர் கிடைக்காமல் இருந்தால் 04735-203 360 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
23-Nov-2024