| ADDED : ஜன 12, 2024 01:20 AM
புதுடில்லி நம் அண்டை நாடான மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டு போரால், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அந்த நாட்டைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நம் எல்லைக்குள் வந்துள்ளனர் என, நம் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே குறிப்பிட்டார்.ராணுவ தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது குறித்து, ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று கூறியதாவது:நம் அண்டை நாடான மியான்மரில், 2021ல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள ஆயுதம் ஏந்திய பழங்குடியின அமைப்புகள் இணைந்து, ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு எல்லை பகுதி களை ஆயுதம் ஏந்திய குழு கைப்பற்றி வருகிறது. இதனால், மியான்மரில் இருந்து அந்த நாட்டு ராணுவத்தினர் நம் நாட்டுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர்.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 400க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்தனர். அவர்கள் உரிய முறையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம், மியான்மர் ராணுவத்துக்கு மட்டுமல்லாமல், நமக்கும் கவலையை ஏற்படுத்திஉள்ளது.கிழக்கு லடாக் உட்பட நாட்டின் எல்லை பகுதிகளில் நிலைமை தற்போது சீராக உள்ளது. ஆனால், இந்த பிரச்னை மிகவும் சிக்கலானது என்பதால் எச்சரிக்கையுடனும், தயார் நிலையிலும் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.