செயற்கை மழை சோதனை தாமதமாகும்: அமைச்சர் சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்
புதுடில்லி:“வானிலை நிலவர மாறுபாட்டால், செயற்கை மழைப்பொழிவு சோதனை தாமதமாகும்,” என, டில்லி அரசின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார். இதுகுறித்து, டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நிருபர்களிடன் நேற்று கூறியதாவது: வடமேற்கு டில்லியின் ஐந்து இடங்களில் அக்டோபர் 7 முதல் 9ம் தேதி வரை செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், நாளை முதம் 7ம் தேதி வரை டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வறண்ட வானிலை காலத்தில் செயற்கை மழை சோதனை நடத்தினால் மட்டுமே தெளிவான முடிவு கிடைக்கும். எனவே, செயற்கை மழை சோதனைக்கு வானிலை ஆய்வு மையம் தற்போதைக்கு அனுமதிக்காது என்றே தெரிகிறது. அதனால், வறண்ட வானிலை வரை காத்திருப்போம். வடமேற்கு டில்லியில் ஐந்து இடங்களில் செயற்கை மழை சோதனை நடத்த, உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி.,யுடன் டில்லி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்தச் சோதனை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உட்பட 23 மத்திய அரசின் துறைகளிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது. உச்சகட்ட குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த செயற்கை மழை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சோதனைக்காக கான்பூர் ஐ.ஐ.டி.,க்கு ஏற்கனவே நிதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.