உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெறுவார் பிருத்விராஜ் சவானால் காங்கிரசில் சர்ச்சை

அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெறுவார் பிருத்விராஜ் சவானால் காங்கிரசில் சர்ச்சை

புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி வெற்றி பெறும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் அதிரடியாக தெரிவித்தது, சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கைகோர்த்து செயல்படுகிறது. என்றாலும், டில்லி மாநில அரசியலில் இருகட்சிகளும் எதிரும் புதிருமாகவே உள்ளன. இரு கட்சிகளின் தலைவர்களும் மோதல் போக்கையே கடைபிடிக்கின்றனர்.டில்லி சட்டசபைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 'இண்டியா' கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் அளித்த பேட்டியில், “டில்லி தேர்தல் மிகவும் முக்கியமானது. இங்கு அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன். காங்கிரசும் களத்தில் உள்ளது, தேர்தலில் போட்டியிடும். காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை...,” என்று கூறியிருந்தார்.இந்த கருத்து, டில்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சவானுக்கு சிக்கல் ஏற்பட்டது.இதுதொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:டில்லி சட்டசபைத் தேர்தல் குறித்த என் கருத்துகள் சூழலுக்கு அப்பாற்பட்டவை. 'இண்டியா' கூட்டணி ஒன்றாகப் போராடியிருந்தால் கூட்டணியின் வெற்றி உறுதியாகியிருக்கும். இப்போது அனைத்து முக்கியக் கட்சிகளும் களத்தில் இருப்பதால் அது மாறிவிட்டது. ஒரு வெளிப்படையான தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய உத்வேகத்தை பெற்றுள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.சட்டசபைத் தேர்தலில், புதுடில்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனுமான பர்வேஷ் வர்மாவை, பா.ஜ., களமிறக்கியுள்ளது.இதே தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ