பஸ் டிரைவருக்கு இதயவலி உதவிக்கு சென்ற ஏ.எஸ்.ஐ.,
சாந்திநகர்: பி.எம்.டி.சி., பஸ் டிரைவருக்கு இதய வலி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் உதவிக்குச் சென்றதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பெங்களூரு, சாந்திநகரின் டபுள் ரோட்டில் பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் வீரேஷுக்கு திடீரென இதய வலி ஏற்பட்டது. அவர் தன் இருக்கையில் ஒரு பக்கமாக சாய்ந்துவிட்டார். பஸ் மிகவும் நிதானமான சென்றது.சாந்திநகர் சந்திப்பில், ஹலசூரு கேட் போக்குவரத்து போலீஸ் நிலைய ஏ.எஸ்.ஐ., ரகுகுமார் பணியில் ஈடுபட்டிருந்தார். பஸ் நிதானமாக வருவதை அவர் கவனித்தார். சந்தேகமடைந்த அவர், பஸ்சின் டிரைவர் இருக்கை பகுதியின் கதவை திறந்து பார்த்தபோது, டிரைவர் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதை பார்த்தார்.ஏ.எஸ்.ஐ., ரகுகுமார், டிரைவர் கதவு வழியாகவே பஸ்சுக்குள் நுழைந்தார். ஹேண்ட் பிரேக் போட்டு, பஸ்சை நிறுத்தினார். அதன்பின் நடத்துனரின் உதவியுடன், டிரைவர் வீரேஷை கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்து, அவரது உயிரை காப்பாற்றினார்.சம்பவம் நடந்தபோது, பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். ரகுகுமார் ஹேண்ட் பிரேக் போட்டிருக்காவிட்டால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி, பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.ஏ.எஸ்.ஐ.,யின் சமயோஜித புத்தியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணியரும் உயிர் தப்பினர்; பலரும் அவரை பாராட்டினர்.