| ADDED : ஜன 18, 2025 08:17 PM
ராய்ப்பூர்: பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், குற்றவாளி என சந்தேகப்படும் நபர் சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.பாலிவுட் நடிகர் சயீப் அலிகான்,54, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அங்குள்ள 12வது மாடியில் நான்கு தளங்களுடன் இவரது வீடு உள்ளது. மனைவியும், நடிகையுமான கரீனா கபூர், மகன்கள் தைமூர் மற்றும் தேஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், சயீப் அலிகானை ஆறுமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். கத்தியால் குத்தியவன் நடந்து சென்ற சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார், தனிப்படைகள் அமைத்து அவனை தேடி வந்தனர்.இந்நிலையில், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா(31) என்பதும், மும்பையில் இருந்து ஜானேஸ்வரி ரயில் மூலம் கோல்கட்டா செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: குற்றவாளியின் நடமாட்டம் மற்றும் மொபைல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசார், ரயில்வே போலீசாரை உஷார்படுத்தி இருந்தனர். அவனது போட்டோவையும் அளித்து இருந்தனர். இதனையடுத்து சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் இருந்த போலீசார் ஆகாஷ் கைலாஷை கைது செய்தனர். இவரை புகைப்படம் எடுத்து மும்பை போலீசுக்கு அனுப்பிய பிறகு போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர். வீடியோ கால் மூலமும் மும்பை போலீசார் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, மும்பை போலீசார் ராய்ப்பூர் விரைந்துள்ளனர்.