ராஞ்சி: ''பழங்குடியினர் வரலாற்றை அழிக்க பா.ஜ., முயற்சிக்கிறது'', என ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: பழங்குடியினரை வனவாசிகள் என அழைக்கும் பா.ஜ., அவர்களுக்காக செய்தது என்ன? நீங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றும் வாழ்க்கை முறை, வரலாறு மற்றும் அறிவியலை அழிக்க முயற்சி செய்கின்றனர். ஆதிவாசிகள் என்றால், முதல் உரிமையாளர்கள் என்று அர்த்தம். வனவாசிகள் என்றால், வனத்தில் வாழ்பவர்கள் என பொருள்படும்.இந்திய கல்வி முறையில் பழங்குடியினர் பற்றி 10 முதல் 15 வரிகள் மட்டுமே இருக்கும். அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை பற்றி இருக்காது. உங்களின் உரிமை உங்களுக்கு வழங்கப்படவில்லை. தனித்துவம் மிக்கவர்கள் பற்றி கற்றுக்கொடுக்க நமது கல்வி அமைப்பு தோல்வி அடைந்துவிட்டது. பழங்குடியினர், விவசாயிகள், ஒபிசியினரின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளது.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், பழங்குடியினர் என்பதால் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை. இந்த நாட்டைக் கட்டமைத்த விவசாயிகள், தொழிலாளர்கள், தச்சர்கள், முடிதிருத்துபவர்களின் வரலாறு எங்கே ? தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மதிப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உங்களின் உரிமைகளை அவர் எடுத்துக் கொள்கிறார். உங்களுக்கு மரியாதை அளிக்கிறார். ஆனால், அமைப்புகளில் இருந்து உங்களை நீக்கிவிட்டார். 90 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். பழங்குடியினர், தலித்கள் நிதி அமைச்சகத்தில் இல்லை.அனைத்து பகுதியில் இருந்தும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதை பாதுகாக்க வேண்டும். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தை பா.ஜ., கட்டுப்படுத்துகிறது.இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் என்ற கட்டுப்பாட்டை நீக்குவோம். மாநிலங்களுக்கான நிதி மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை பா.ஜ., கட்டுப்படுத்துகிறது. எங்களிடம் நேர்மை உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி எதிர்க்கிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.