உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓராண்டு சிறையில் இருந்தால்தான் ஜாமினா... யார் சொன்னது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஓராண்டு சிறையில் இருந்தால்தான் ஜாமினா... யார் சொன்னது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான விற்பனையில், 2,161 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரின் சகோதரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. அப்போது, 'பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதானவர், சிறையில் ஓராண்டு இருக்க வேண்டியது கட்டாயம் என சட்டம் எதுவும் இல்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பிரமுகரும், ராய்ப்பூர் மேயருமான அய்ஜாஸ் தேபாரின் சகோதரர் அன்வர் தேபார். தொழிலதிபரான அன்வர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, மதுபான விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது.இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கில் 2024 ஜூலை 4ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அன்வர் தேபார், 2,161 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக குற்றஞ்சாட்டி இருந்தது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வர் தேபார், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வழக்கில் ஜாமின் பெற, சம்பந்தப்பட்ட குற்றவாளி ஓராண்டாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்ற அளவுகோலை உச்ச நீதிமன்றம் பின்பற்றுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட அன்வர் தேபார், ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க கூடாது' என, வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கின் விசாரணை இப்போதைக்கு முடிவடைவதாக தெரியவில்லை. அதுவரை இவரை சிறையில் வைத்திருக்க முடியாது. அவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்படுமானால், அதிகபட்ச தண்டனையே ஏழு ஆண்டுகள் தான். ஏற்கனவே அவர், ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்து விட்டார்.இந்த வழக்கில், 450க்கும் மேற்பட்ட சாட்சிகள் உள்ளனர். அவர்களை விசாரித்து முடிக்கும் வரை, இவரை சிறையில் வைத்திருப்பது நியாயம் இல்லை. எனவே, இவரை ஜாமினில் விடுவதுதான் சரியானதாக இருக்கும்.

சட்டம் எதுவுமில்லை

மேலும், பணமோசடி வழக்கில் கைதானவர் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என சட்டம் எதுவும் சொல்லவில்லை.சிறையில் இருக்கும் அன்வர் தேபார் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக, தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய போதும் உச்ச நீதிமன்றம், இதே போன்ற உத்தரவை பிறப்பித்தது.

ஜாமின் வாங்க அலைக்கழிப்பு

நீதிபதிகள் வேதனைமோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 65 வயதான நபருக்கு, 50 சதவீத கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. அவர் ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டார். மனு நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்தது. 'மனுதாரரின் வயது 65; அவருக்கு 50 சதவீத பார்வை குறைபாடு உள்ளது. இதுபோன்ற வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமின் பெற உச்ச நீதிமன்றம் வரை பயணிக்க வேண்டியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.'குற்றவாளியை ஒரு வாரத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சரியான நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகி வழக்கை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு தருவதை உறுதி செய்த பின் ஜாமின் வழங்கலாம்' என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Balasubramanian
மே 22, 2025 11:09

வயதாகி விட்டது கண் பார்வை குறைந்து கொண்டே வருகிறது என்று எல்லாம் நீதிமன்றத்தில் வாதாட தயாரானவர்கள் அரசுக்கு நிதி இழப்பு செய்யலாமா.


Rajasekar Jayaraman
மே 21, 2025 15:38

அரசு பணத்தை கொள்ளை இடும் அரசியல் வாதிகளுக்கு ஜாமீன்..


Tetra
மே 21, 2025 13:19

சட்டத்தை இயற்றிட்டா போச்சு. உங்களுக்குத்தான் உச்சா நீதி மன்றம் இருக்கிறதே. தள்ளுபடி செய்ய


lana
மே 21, 2025 12:46

இது உச்சநீதிமன்றம் அல்ல ஜாமீன் நீதிமன்றம். ஏன் நீங்கள் இந்த case எல்லாம் முடிக்க ஒரு காலம் நிர்ணயம் செய்ய கூடாது. ஜனாதிபதி க்கே நிர்ணயம் செய்யும் போது நீதிமன்றம் க்கு கால நிர்ணயம் செய்ய முடியாதா.


முருகப்பன்
மே 21, 2025 07:23

சட்டமெல்லாம் சரி. இவிங்க ஒரு கேசை பட்டியலிட்டு உருப்படியா விசாரிக்க ஒரு வருசமாவது ஆகும். அதைத்தான் வக்கீல் சொல்றாரு.


raja
மே 21, 2025 06:12

அப்போ கண் பார்வை குறைபாடு வயது 65 ஆனா நாட்டை கொள்ளை அடித்தாலும் ஜாமீன் கொடுக்கும் நமது நாட்டு நீதிமன்றங்கள் ....என்ன கொடுமை கோவாலு....


மீனவ நண்பன்
மே 21, 2025 05:03

நீதிபதிகளுக்கு தாராள மற்றும் இளகிய மனது


முக்கிய வீடியோ