ஹிந்து நிர்வாகி கொலை: மங்களூரில் பந்த்
மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரில், பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலையை கண்டித்து, நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புலிமயலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுகாஸ் ஷெட்டி, 30; பஜ்ரங் தள் தொண்டர்.இவர் மீது, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுகாஸ் ஷெட்டி, கடந்த ஆண்டு ஜாமினில் வந்தார். மங்களூரின் பஜ்பே கின்னிபதவு பகுதியில், ஆறு பேர் அடங்கிய கும்பல், சுகாஸ் ஷெட்டியை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக வெட்டி தப்பியது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுகாஸ் கொலையை கண்டித்து, தட்சிண கன்னடா மாவட்டத்தில், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன்படி, மங்களூரின் ஹம்பன்கட்டா, பல்னிர், பால்மட்டா, கங்கனாடி, உர்வா உள்ளிட்ட பகுதிகளில், காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டன. மங்களூரில் மூன்று தனியார் பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. மூடபித்ரி, சூரத்கல், சுள்ளியா, புத்துாரில் சாலைகளில் டயர்களை எரித்து, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதற்கிடையே, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், மங்களூரில் வரும் 6ம் தேதி காலை 6:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.