காஸ்சிலிண்டர் வெடித்து சிதறி கட்டடம் இடிந்து மாணவி பலி
பெங்களூரு: காஸ் சிலிண்டர் வெடித்து, கட்டடம் இடிந்து விழுந்து, கெமிக்கல் தொழிற்சாலையில் தீப்பிடித்ததில், இடிபாடுகளில் சிக்கி கல்லூரி மாணவி பலியானார். இடிபாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட மூன்று தீயணைப்பு வீரர்கள் சிக்கி பாதிப்புக்குள்ளாயினர். பெங்களூரு, மாகடிரோடு சும்மனஹள்ளியில் நான்கு மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வந்தது. மூன்று மாடி கட்டடத்தில், ஒன்பது குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று பகல் ஒன்றரை மணியளவில், இக்கட்டடத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், அருகிலுள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா என்ற கல்யாண மண்டபத்தின் பின் பகுதி சுவர்கள் இடிந்து விழுந்தது. கட்டடத்தில் சிலிண்டர் வெடித்ததால், கட்டடத்தில் வசித்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தீயணைப்பு படையினர் உட்பட, 9 பேர் சிக்கி கொண்டனர். இடிபாட்டில் சிக்கிய தீயணைப்பு படை வீரர்கள் மூன்று பேர் உட்பட ஒன்பது பேர் மீட்கப்பட்டனர். கட்டடம் இடிவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த மாணவி கவிதா, 17, இடிபாடுகளில் சிக்கி, மருத்துவமனையில் பலியானார். சிலிண்டர் வெடித்து சிதறியதில் கீழ் தளத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. தீ கொழுந்து விட்டெரிந்தது. கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.