பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் பீதி!: கொரோனா ரிப்போர்ட் மீது விரைவில் நடவடிக்கை
பெங்களூரு: கொரோனா பெருந்தொற்று பரவிய வேளையில் நடந்த முறைகேடு தொடர்பாக, நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் அறிக்கை அடிப்படையில், அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்க, பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், அதிகாரிகள் நடுக்கத்தில் உள்ளனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. வால்மீகி மேம்பாட்டு ஆணையம், 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணைய முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் சமீப காலமாக அஸ்திரமாக பயன்படுத்தி, சித்தராமையா அரசுக்கு குடைச்சல் கொடுக்கின்றன. முதல்வர் ஆர்வம்
எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், முந்தைய பா.ஜ, அரசில் நடந்த முறைகேடுகளை, காங்கிரஸ் அரசு கிளறுகிறது. முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் மீதான சட்டவிரோத நில மறுஅறிவிப்பு, எடியூரப்பா மீதான பாலியல் வழக்கு ஆகியவற்றின் விசாரணையை தீவிரப்படுத்துகிறது.இதற்காகவே தனித்தனி விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பா.ஜ., பல முறை அரசை கிண்டலாக விமர்சித்தது.'முடா' முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறையின் பிடி இறுகுவதால், முதல்வர் சித்தராமையா கவலையில் உள்ளார். அதேபோன்று பா.ஜ., தலைவர்களையும் நெருக்கடியில் சிக்கவைக்க, முதல்வர் வியூகம் வகுக்கிறார்.பா.ஜ., அரசில் நடந்ததாக கூறப்படும் கொரோனா முறைகேடுப் புகார் குறித்த விசாரணையை தீவிரப்படுத்துவதில், அவர் ஆர்வம் காட்டுகிறார்.கடந்த 2019 - 20ல், கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில், வைரஸை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கவச உடைகள், முகக்கவசம், தடுப்பூசி உட்பட, மருத்துவ உபகரணங்களை, நிர்ணயித்ததை விட கூடுதலாக விலை கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் முதல்வர் சித்தராமையா கமிட்டி அமைத்தார். அரசு உத்தரவு
கமிட்டியும் பல கோணங்களில் விசாரணை நடத்தி, அரசுக்கு இடைக்கால அறிக்கை அளித்துள்ளது. அறிக்கையின் 5ம் பாகத்தின் 1,320 பக்கம் முதல், 1,466 பக்கம் வரை, மாநகராட்சி சம்பந்தப்பட்ட முறைகேடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1,467 முதல் 1,722 வரையிலான பக்கங்களில், தாசரஹள்ளி, கிழக்கு மண்டலம், மஹாதேவபுரா, ராஜராஜேஸ்வரி நகர் மண்டலம் தொடர்பான முறைகேடுகள் விவரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக மாநகராட்சியின் தலைமை கமிஷனருக்கு அரசு பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்; விளக்கம் பெறுங்கள்வேறு துறைக்கு மாறிய அதிகாரிகளிடம் விளக்கம் பெறுங்கள்யார் யார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுநஷ்டத்தை எப்படி வசூலிப்பதுமேற்கண்ட அனைத்தும் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள்கோப்புகள் மாயமாகி இருந்தால் போலீசில் புகார் அளியுங்கள்அதுகுறித்து தனியாக அறிக்கை தாக்கல் செய்யுங்கள்.மாநில அரசின் உத்தரவுபடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை, தலைமை கமிஷனர் தயாரித்து வருகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், பொறியாளர்கள், நிதிப்பிரிவு அதிகாரிகள் என, தனித்தனி பட்டியல் தயாராகிறது.ஊழல் நடந்ததாக கூறப்படும் மத்திய அலுவலகம், மண்டல வாரியான அதிகாரிகள், ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பட்டியலின்படி, அந்தந்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, மாநகராட்சி தயாராவதால், அதிகாரிகள், ஊழியர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.குறிப்பாக கொரோனா காலகட்டத்தில், மாநகராட்சியில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களின் துாக்கத்தை, மைக்கேல் குன்ஹா அறிக்கை கெடுத்துள்ளது.