ஸ்கோடா இந்தியாவின் கீழ் வந்தது பென்ட்லீ சொகுசு கார் நிறுவனம்
புதுடில்லி:'ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா' குழுமத்தில், ஸ்கோடா, போக்ஸ்வேகன், ஆடி, போர்ஷே, லம்போர்கினி உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் உள்ள நிலையில், ஆறாவதாக, பிரிட்டன் சொகுசு கார் நிறுவனமான, 'பென்ட்லீ' இணைந்துள்ளது.உலகளவில், போக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் பென்ட்லீ நிறுவனம் இருந்தாலும், அதன் இந்திய செயல்பாடுகள், முதல் முறையாக ஸ்கோடா இந்தியா குழுமத்தின் கீழ் வந்துள்ளது. இதற்குமுன், எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம், பென்ட்லீ கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தது.எனவே, ஸ்கோடா குழுமத்தின் கீழ், பென்ட்லீ இந்தியா என்ற பிரிவை ஏற்படுத்தி, ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக, மும்பை, பெங்களூரு, புதுடில்லி ஆகிய மூன்று பெருநகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பென்ட்லீ கார்களின் இறக்குமதி, விற்பனை, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும், இந்த ஷோரூம்கள் வாயிலாக செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.பென்ட்லீ இந்தியா பிராண்ட் இயக்குநராக, போக்ஸ்வேகன் குழும சந்தைப்படுத்துதல் தலைவர் அபே தாமஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். நடப்பு நிதியாண்டுக்குள், பிளையிங் ஸ்பர், கான்டினென்டல் ஜி.டி., ஆகிய இரு சொகுசு கார்கள் அறிமுகமாக உள்ளன.