உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறந்த சுற்றுலா கிராமம் விருது பெற்ற குத்தலுார் 

சிறந்த சுற்றுலா கிராமம் விருது பெற்ற குத்தலுார் 

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், கடலோர பகுதி. கடலில் உற்சாக குளியல் போடவும், நீர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் பெங்களூரு, மைசூரு உட்பட மாநிலத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த, சுற்றுலா பயணியர் தினமும் செல்கின்றனர்.தட்சிண கன்னடா கடற்கரைக்கு மட்டும் தான் பெயர் பெற்றதா என்று சொன்னால் கண்டிப்பாக இல்லை. பசுமைக்கும் பெயர் பெற்ற மாவட்டம். அடர்ந்த காடுகள், வனப்பகுதிளை தன்னகத்தே கொண்டது.தட்சிண கன்னடாவின் பெல்தங்கடியில் உள்ள குத்தலுார் கிராமம், சிறந்த சுற்றுலா கிராமமாக, மத்திய அரசின் சுற்றுலா துறையால், கடந்த செப்டம்பரில் தேர்வு செய்யப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமமாக குத்தலுார் உள்ளது. கிராமத்தில் ஏராளமான நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மலையேற்றம் செல்வதற்கும் நிறைய இடங்கள் உள்ளன.இந்த கிராமத்திற்கு விருது கிடைக்க, கிராமத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஹரிஷ், அவரது நண்பர்கள் சந்தீப், சிவராஜ் தான் முக்கிய காரணம். சிறந்த சுற்றுலா கிராமம் பற்றிய அறிவிப்பை, மத்திய சுற்றுலா துறை வெளியிட்டதும், தங்கள் கிராமத்தை பற்றிய தகவல்கள், புகைப்படங்களை சேகரித்து, சுற்றுலா துறைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனுப்பிய தகவல்கள், சுற்றுலா பயணியர் கூறிய கருத்துகள் அடிப்படையில், குத்தலுார் சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டது.வார இறுதி நாட்களில் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்போர், குத்தலுார் கிராமத்திற்கு ஒரு முறை சென்று வரலாம். அங்கு சென்றால் வீடு திரும்ப மனம் இருக்காது.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 318 கி.மீ., துாரத்தில் இந்த கிராமம் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பெல்தங்கடிக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. ரயிலில் செல்வோர் சுப்பிரமணியா ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ