கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதை, மத்திய ஆய்வகம் உறுதி செய்துள்ளதாக மாநில கால்நடை துறை அமைச்சர் சிஞ்சு ராணி தெரிவித்துள்ளார். இறைச்சி
கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவுவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதையடுத்து கோழிப்பண்ணைகளில் பறவைகளின் மாதிரிகளை சேகரித்த மாநில கால்நடை துறை அதிகாரிகள், அவற்றை மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில், பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மாநில கால்நடை துறை அமைச்சர் சிஞ்சு ராணி தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: ஆலப்புழாவில் நெடுமுடி, செருதனா, கருவட்டா கார்திகபள்ளி, அம்பலபுழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி, புறக்காடு போன்ற பகுதி களிலும், கோட்டயம் மாவட்டத்தில் குருப்பந்தரா, கல்லுபுரயக்கல், வெல்லுார் போன்ற பகுதி களிலும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பறவை காய்ச்சலை மதிப்பீடு செய்யும் பணியை, கால்நடை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கோழிப்பண்ணைகளில் இருந்து கிடைக்கும் இறைச்சி, முட்டை போன்றவற்றை பயன்படுத்த எந்த தடையும் விதிக்கவில்லை. தொடர் கண்காணிப்புக்கு பின், தேவைப்பட்டால் கோழிகளை கொல்வது, முட்டை மற்றும் இறைச்சிக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கோழி இறைச்சி, முட்டை விற்பனை அதிகரிக்கும் நிலையில், பறவை காய்ச்சல் பரவுவது பண்ணையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இழப்பீடு
தேவைப்பட்டால் கோழிப்பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள் மூலம் தான் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுகிறது. கடந்த ஆண்டிலும் இதேபோல் கோட்டயம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டாவில் பறவை காய்ச்சல் பரவியது. இவ்வாறு அவர் கூறினார்.
பரவுவது எப்படி?
'ஏவியன் புளூ' எனப்படும் பறவை காய்ச்சல், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று. இந்த நோய் பாதித்த பறவைகளின் எச்சம், உமிழ்நீர் மூலம் மற்ற பறவைகள், விலங்குகளுக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. கோழிப்பண்ணை, பால் பண்ணை போன்றவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பறவை மற்றும் விலங்குகள் மூலம் இந்த காய்ச்சல் பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களை தாக்கினால், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். சில நேரம் பறவை காய்ச்சல் மூளையையும் தாக்கும். 'நன்றாக வேகவைக்கப்பட்ட கோழி இறைச்சி, முட்டைகளை உண்பதாலோ அல்லது பதப்படுத்தப்பட்ட பாலை குடிப்பதாலோ பறவை காய்ச்சல் வராது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.