பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும், பிர்ஸா முண்டாவின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நாடு முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யும்படி, பா..ஜ.,வினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.மதமாற்றம்
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர், பிர்ஸா முண்டா. பழங்குடியின மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, கிறிஸ்துவ மிஸனரிகளுக்கு எதிராக போராடிய இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தவர். பழங்குடியின மக்கள், இவரை தங்களின் கடவுளாகவே வழிபடுகின்றனர்.பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், 2021ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பிர்ஸா முண்டாவை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாள், 'ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்' அதாவது 'பழங்குடியின பெருமை தினம்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என கூறியிருந்தார்.இந்நிலையில், வரும் 15ல் பிர்ஸா முண்டாவின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை, நாடு முழுதும் கொண்டாட வேண்டுமென கட்சியினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். தே.ஜ., கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் முடிவாகிஉள்ளது.பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக பிர்ஸா முண்டாவின் பங்களிப்பு குறித்தும், பழங்குடியின மக்களின் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்தும், இளைய தலைமுறையினருக்கு விளக்கும் விதமாக பாத யாத்திரைகள், பேரணிகள் ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பேரணி
இதற்காக, விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தலைமையில், ஐந்து மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பிர்ஸா முண்டாவின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை தலைமை ஏற்று வழிநடத்தி துவக்கி வைக்கும் விதமாக, பீஹார் மாநிலம் ஜமுய் நகரில், பிர்ஸா முண்டாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, பேரணியில் பங்கேற்க உள்ளார்.- நமது டில்லி நிருபர் -