பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பெங்களூரு: பலாத்கார வழக்கில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவின் நீதிமன்றக் காவல், மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ராம்நகரின் ககலிபுராவைச் சேர்ந்த 40 வயது பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60, கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.மறுநாள் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.பலாத்கார புகார் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்தது. முனிரத்னாவை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் 14 நாட்கள் காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் நேற்று முனிரத்னா ஆஜர்படுத்தப்பட்டார். அவரது, நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.அப்போது, “முனிரத்னாவுக்கு வீட்டு சாப்பாடு வழங்க அனுமதி வேண்டும்,” என, அவரது வக்கீல் அருண், நீதிபதி சிவகுமாரிடம் கேட்டார். “சிறை அதிகாரிகளிடம் முதலில் மனுக் கொடுங்கள். அவர்கள் அனுமதி தராவிட்டால், இங்கு வாருங்கள்,” என, நீதிபதி கூறினார்.