வக்பு நிலத்தை அபகரித்த தலைவர் பா.ஜ., ரமேஷ் குற்றச்சாட்டு
பெங்களூரு: 'கர்நாடக வக்பு வாரிய தலைவரே, வக்பு நிலத்தை அபகரித்துள்ளார்' என பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:சித்ரதுர்காவின் ஆகசனகல்லு கிராமத்தின் சர்வே எண் 11ல், 6 ஏக்கர் நிலத்தை முந்தைய சிறப்பு மாவட்ட கலெக்டர், முஸ்லிம் சமுதாயத்தின் மயானத்துக்காக வழங்கினார். வக்பு வாரிய தலைவர் அன்வர் பாஷா, இந்த நிலத்தின் சர்வே எண்ணை, சட்டவிரோதமாக சர்வே எண் 25 என, திருத்தம் செய்து அபகரித்துள்ளார்.பத்து கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள அந்த நிலத்தில் பள்ளிக்கூடம்; தான் வசிப்பதற்காக ஆடம்பரமான சொகுசு பங்களா கட்டியுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தது போன்று, முஸ்லிம் சமுதாயத்தின் மயானத்துக்காக வழங்கப்பட்ட நிலத்தை, அவரே ஆக்கிரமித்திருப்பது துரதிருஷ்டவசம்.வக்பு வாரிய நிலத்தை அபகரித்து, பள்ளி மற்றும் பங்களா கட்டிய வக்பு வாரிய தலைவருக்கு, வாரிய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு நிலத்தை மீட்கும்படி, முதல்வரிடம் வலியுறுத்தினேன். நில அபகரிப்பு குறித்து, போதிய ஆவணங்களுடன், லோக் ஆயுக்தாவிலும் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.