மொபைலில் வீடியோ எடுத்த பா.ஜ., உறுப்பினர்கள்
காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் பேசுவதை, பா.ஜ., உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுப்பதாக, காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரசாமி குற்றஞ்சாட்டினார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த சிவலிங்கேகவுடா, ''இதுபோன்று செய்யாதீர்கள்,'' என பா.ஜ., உறுப்பினர்களை பார்த்துக் கூறினார்.''இந்த சபையில் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த, மூன்று பேரின் அமைச்சர் பதவி பறிபோனது ஞாபகம் இல்லையா?'' என்றும் கோபமாக கூறினார். ஓஹோ... ஓஹோ!
காங்கிரஸ் உறுப்பினர் நயனா பேசுகையில், ''பா.ஜ., உறுப்பினர் அஸ்வத் நாராயண், இந்த சபையில் மூத்தவர். பெரியவர்கள் பேசும்போது குறுக்கே எழுந்து பேச கூடாது என்று, என்னிடம் ஒரு முறை கூறினார். ''ஆனால் இப்போது அவரே, முதல்வர் பேசுகையில் குறுக்கே பேசுகிறார். என்னை போன்ற முதன்முறை எம்.எல்.ஏ.,க்களுக்கு அஸ்வத் நாராயண் வழிகாட்டியாக இருக்க வேண்டும்,'' என்றார்.நயனாவை கிண்டல் செய்யும் வகையில், பா.ஜ., உறுப்பினர்கள், 'ஓஹோ... ஓஹோ...' என்று கூச்சல் எழுப்பினர். சிரித்துக் கொண்டே நயனா இருக்கையில் அமர்ந்தார். சபாநாயகர் நையாண்டி
''முதல்வர் பேசும்போது குறுக்கே பேச கூடாது என்றால், எங்கள் குறைகளை எப்படி சொல்வது? நாங்களும் நீண்ட நேரம் பேச வேண்டாமா?'' என, சபாநாயகர் காதரை பார்த்து, பா.ஜ., உறுப்பினர் சி.சி.பாட்டீல் கேட்டார்.''நீங்கள் முதல்வராகும்போது, உங்களுக்கும் பேச நீண்ட நேரம் தருகிறேன்,'' என சி.சி.பாட்டீலிடம் காதர் கூறினார். அப்போது பா.ஜ., உறுப்பினர்கள், 'சி.சி.பாட்டீல் முதல்வராகும்போது, நீங்கள் சபாநாயகராக இருக்க முடியாது' என்றனர். இதை கேட்டு சபையில் சிரிப்பலை எழுந்தது.