பொது இடங்களில் தொழுகை பா.ஜ., - எம்.எல்.ஏ., கண்டிப்பு
புதுடில்லி:பொது இடங்களில் தொழுகை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி போலீஸ் கமிஷனருக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஷகுர்பஸ்தி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., கர்னைல் சிங், டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதம்:டில்லி மாநகரின் பல இடங்களில் சாலையோரம் மற்றும் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் பலர், தொழுகை நடத்துகின்றனர். இதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.சில இடங்களில் ஆம்புலன்ஸ், பள்ளி பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அத்தியாவசிய சேவைகளிலும் தாமதம் ஏற்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால், பொது ஒழுங்கு முக்கியம். தங்கள் வழிபாட்டால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எந்த நிகழ்வும் இருக்கக் கூடாது.பொது இடங்களில் தொழுகை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஷகுர் பஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.,வான கர்னைல் சிங், டில்லி மாநில பா.ஜ.,வின் கோவில் பிரிவு தலைவராகவும் பதவி வகிக்கிறார்.கடந்த மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை விட 20,998 ஓட்டுக்கள் அதிகம் பெற்று கர்னைல் சிங் வெற்றி பெற்றார்.