பெங்களூரு: விவசாயிகளுக்கு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்புவதை கண்டித்து, எதிர்க்கட்சியான பா.ஜ., மாநிலம் தழுவிய போராட்டத்தை நேற்று துவங்கியது. இதில், பா.ஜ., தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்றும் போராட்டம் நடக்கிறது.'முடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முதல்வரின் மனைவிக்கு விதிமீறலாக மனை பெற்ற வழக்கு, கர்நாடக அரசியலில், பெரும் சூறாவளியை கிளப்பியுள்ளது. சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி உட்பட, பலர் மீது லோக் ஆயுக்தாவில் வழக்கு பதிவாகியுள்ளது. அமலாக்க துறை
மற்றொரு பக்கம் அமலாக்கத் துறையும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துகிறது. முதல்வர் சித்தராமையா உட்பட, மற்றவர்களிடம் லோக் ஆயுக்தா விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறையும் பலரிடம் விசாரணை நடத்தியுள்ளது. முதல்வரிடம் விசாரிக்க எந்த நேரத்திலும், 'சம்மன்' அனுப்ப வாய்ப்புள்ளது.இதற்கிடையே வக்பு வாரிய விவகாரம், முதல்வருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நிலங்களை வக்பு சொத்து என குறிப்பிட்டு, வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்கின்றனர்.வக்பு வாரிய நோட்டீசை கண்டித்து, இரண்டு நாட்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ஜ., நடத்துகிறது. முதல் நாள் போராட்டம் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகம் முன்பாக நடந்த போராட்டத்தில், கட்சி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். விஜயேந்திரா
ஷிவமொக்கா, தாவணகெரே, சிக்கமகளூரு, உடுப்பி, தட்சிணகன்னடா, உத்தரகன்னடா, பெலகாவி, தார்வாட், கலபுரகி என, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி, அரசை திணறடித்தனர். ஷிவமொக்காவில், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையிலும், சிக்கமகளூரில் சி.டி.ரவி, கலபுரகியில், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தலைமையிலும் போராட்டம் நடந்தது.அதேபோன்று அந்தந்த மாவட்ட தலைவர்கள், தலைமை ஏற்றனர். 'எந்த காரணத்துக்காகவும், விவசாயிகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு, நோட்டீஸ் அளிக்க கூடாது' என, வலியுறுத்தினர்.மேலும், 'வக்பு வாரியம், ஹிந்து சமுதாயத்தை குறி வைத்துள்ளது. விவசாயிகள் நிலம், கோவில், சமுதாய பவன், திருமண மண்டபம் என, பல சொத்துகளை கைப்பற்ற நோட்டீஸ் அளிக்கிறது. 'இனி ஒரே ஒரு நோட்டீஸ் அனுப்பினாலும், சகித்து கொள்ள மாட்டோம். வக்பு தீர்ப்பாயத்தை ரத்து செய்ய வேண்டும். 6.70 லட்சம் ஏக்கர் வக்பு சொத்து என, கூறி கையகப்படுத்த முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். அரசுக்கு எதிராக கோஷமிட்டு, போராட்டம் நடத்திய பா.ஜ.,வினரை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர். போராட்டக்காரர்களை வாகனங்களில் ஏற்றி, போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்றனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தவும் பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். ரகசிய கூட்டம்
மேலிடத்தின் உத்தரவுப்படி, வக்பு வாரிய நோட்டீஸ் விஷயத்தை வைத்து கொண்டு, பா.ஜ., மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியது. ஆனால் சில தலைவர்கள், போராட்டத்தில் பங்கேற்காமல் ரகசிய கூட்டம் நடத்தியது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள பா.ஜ., முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா இல்லத்தில், ரகசிய கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, அரவிந்த் லிம்பாவளி, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா பங்கேற்றனர். வக்பு வாரிய நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியாக போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ஜ.,வுக்கு நிரந்தர தலைவலியாக இருக்கும், விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், வக்பு வாரியத்துக்கு எதிராக தனியாக போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இப்போது அதிருப்தி தலைவர்கள், ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இதன் மூலம் மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். வக்பு வாரிய விவகாரத்தில், பா.ஜ.,வில் பல கோஷ்டிகள் உருவாகியுள்ளன. தனித்தனியாக போராட்டம் நடத்த முற்படுவது, தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கட்சியில் அதிருப்தி, குழப்பம் இருப்பது பா.ஜ., மேலிடத்துக்கு தெரியும். விஜயேந்திராவுக்கு எதிராக, எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட பலர் பகிரங்கமாகவே பேசுகின்றனர். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்துக்கும் வராமல் புறக்கணித்தனர். இதை மேலிடம் கவனித்தும், மவுனமாக இருப்பது தொண்டர்களுக்கு எரிச்சல் அளித்துள்ளது. கோஷ்டி பூசலை சரி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.