முறைகேடுகளால் டில்லி அரசுக்கு நிதி நெருக்கடி பா.ஜ., கடும் குற்றச்சாட்டு
புதுடில்லி:“ஆம் ஆத்மி தலைவர்கள் செய்த முறைகேடுகள் காரணமாக டில்லி அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது,”என, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறினார்.டில்லி நிருபர்களிடம் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது:நிதிநிலையில் சிறந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டில்லி சிறப்பான இடத்தை வகித்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசில் ஏராளமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2015- - 2016ம் ஆண்டின் டில்லி அரசு பட்ஜெட்டில் உபரி நிதி 1.56 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது நேரெதிரான நிலைக்குச் சென்று நிதி நெருக்கடியில் டில்லி அரசு தவிக்கிறது.டில்லி அரசு மேலும் மேலும் கடன்களை வாங்கிக் குவிக்கிறது. தேசிய சிறுசேமிப்பு திட்ட நிதியில் இருந்து 10,000 கோடி கடன் வாங்க விண்ணப்பித்துள்ளது. யூனியன் பிரதேசமான டில்லி அரசுக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.53 சதவீதமாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அரசு கஜானாவைக் கொள்ளையடித்து காலி செய்ததில்தான் சாதனை படைத்துள்ளார்.ஆம் ஆத்மியின் 10 ஆண்டு கால ஆட்சியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக சரிந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் முறைகேடுகள் மற்றும் வரிப் பணத்தை தவறாக பயன்படுத்தியது ஆகியவற்றால், டிலி அரசு இன்று நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபிலும் நிதிநிலை மோசமான நிலையில்தான் இருக்கிறது.கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிக பணம் செலவிட்டதாகக் கூறும் ஆம் ஆத்மி, உள்நாட்டு உற்பத்தியை சின்னாபின்னமாக்கி விட்டது.ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கஜானாவில் சில்லறை கூட மிச்சம் இருக்காது. அதேநேரத்தில், பா.ஜ., தேர்ந்தெடுக்கப்பட்டால், கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியின் ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்பை எப்படி சரிசெய்வது என்பதுதான் பா.ஜ.,வுக்கு சவாலாக இருக்கும்.அடுத்த மாதம் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், டில்லி மக்கள் ஆம் ஆத்மியை தூக்கி எறிவர் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.