பார்வையற்ற சிறுவனின் தங்க வேட்டை
ஒருவர் சாதிப்பதை யாராலும் தடுக்க முடியாது. சாதிக்க வேண்டும் என்ற ஆசையே சாதனையின் மூலமந்திரம். வறுமை, நிறம், ஜாதி, ஊனம் தடையாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் திகழ்ந்தால், பல சாதனைகளை நிகழ்த்தலாம்.அந்த வகையில், பார்வையற்ற சிறுவன் ஒருவர், மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஏழ்மையிலும், பார்வையின்மையிலும் இருந்தாலும், தன் மன உறுதியால் இந்த சாதனையை படைத்துள்ளார்.விஜயபுரா மாவட்டத்தின் டிகோட்டா தாலுகாவின் இட்டாங்கிஹாலா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவா தாண்டகி. இவர், வயலில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது இரண்டு குழந்தைகளும் பார்வையற்றவர்கள்.இதில், அமோக் தங்கடி, 12 என்ற சிறுவன் தான், இந்த கட்டுரையின் நாயகன். நகரின் பார்வையற்றோர் பள்ளியில், 1 முதல் 4 ம் வகுப்பு வரையிலும்; 5ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை, பெலகாவியில் உள்ள பார்வையற்றோருக்கான மகேஸ்வரி பள்ளியிலும் படித்தார்.இப்பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை சுரேஷ், மல்லப்பா என்ற இரு ஆசிரியர்கள், கற்றுக் கொடுத்தனர். அமோக்கின் அர்ப்பணிப்பையும், வேகத்தையும் பார்த்து, ஆசிரியர்கள் அசந்தனர். மாவட்ட அளவிலான பார்வையற்றோர் நீச்சல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால், மாநில போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில், மூன்று தங்கப் பதக்கங்கள்; தேசிய அளவில் 2 தங்கம், 1 வெண்கலப் பதக்கம் வென்றார். இது போன்று பல்வேறு இடங்களில், பல பிரிவுகளில் நடந்த நீச்சல் போட்டியில் சாதனை படைத்தார்.இவரின் சாதனை, அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவரை போன்றவர்களுக்கு முறையான பயிற்சியுடன், நிதியுதவியும் அளித்தால், பார்வையற்ற திறமைசாலிகள், விளையாட்டு உலகில் பிரகாசிப்பர் என்பது உறுதி.பார்வை குறைபாடு ஒரு சாபம் அல்ல; அதை வெல்ல வேண்டும். பார்வையற்றோர் உட்பட மாற்றுத் திறனாளிகள் மீது பரிதாபம் கொள்வதற்கு பதிலாக அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். - அமோக், சாதனையாளர் -- நமது நிருபர் --