உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ரூ.25 லட்சம் கேட்டு 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டில்லியில் ரூ.25 லட்சம் கேட்டு 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடில்லி: டில்லியில், 44 பள்ளிகளிடம் 25 லட்சம் ரூபாய் கேட்டு மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.தலைநகர் டில்லியில் காற்று மாசு பிரச்னை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டன.

அதிர்ச்சி

ஆர்.கே.புரத்தில் செயல்படும் டில்லி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாகவும், 25 லட்சம் ரூபாய் தராவிட்டால், அந்த குண்டுகள் அனைத்தும் வெடிக்கும் என்றும் இ - மெயில் வாயிலாக தலைமை ஆசிரியருக்கு நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து போலீசில் தலைமை ஆசிரியர் புகார் அளித்தார்.இதேபோன்று, இந்தப் பள்ளியின் சப்தர்ஜங்க், கிழக்கு கைலாஷ், வசந்த்கஞ்ச் கிளைகளுக்கும் இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. மேற்கு விஹாரில் செயல்படும் ஜி.டி.கோயென்கா, சாணக்யபுரி பிரிட்டிஷ் பள்ளி, அரபிந்தோ மார்க்கத்தில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி உட்பட 44 பள்ளிகளுக்கு, இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11:38 மணிக்கு அனுப்பப்பட்டிருந்த இ - மெயிலில், 'நான் கட்டடத்தின் உள்ளே பல இடங்களில் வெடிகுண்டு களை வைத்துள்ளேன். சிறிய ரக வெடிகுண்டுகள், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.'அது வெடித்தால் கட்டடங்களுக்கு பலத்த சேதம் இருக்காது. ஆனால், சுற்றியுள்ளவர்கள் படுகாயம் அடைவர். எனக்கு 30,000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் தராவிட்டால், வெடிகுண்டுகள் வெடித்து உங்கள் உடல் பாகங்கள் சேதமடைவது நிச்சயம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்தேகம்

இதற்கிடையே, மாணவர்களும் பள்ளிகளுக்கு வரத் துவங்கியிருந்தனர். பள்ளிகளில் இருந்து வந்த புகார்களை அடுத்து, உள்ளூர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.சந்தேகப்படும்படி எந்த பொருளும் கிடைக்காததை அடுத்து, அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியர்களும், போலீசாரும் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்கள் மாணவர்களை உடனடியாக வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர். இது தொடர்பான தகவல்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டன. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இ - மெயிலை போலீசார் சோதனை செய்ததில், அது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள யுடிகா நகரில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பினும், போலி கணக்கு வாயிலாக அனுப்பப்பட்டிருப்பதால், அதை அனுப்பியோர் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தலைநகர் டில்லியில் நேற்று சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ