வனப்பகுதியில் வசிக்கும் 16,665 பேருக்கு பத்திரம்
பெலகாவி: 'மாநிலத்தில் இதுவரை, வன உரிமை சட்டத்தின் கீழ், உரிமை பத்திரம் பெற 2,99,387 மனுக்கள் வந்தன. இவற்றில் 16,665 பேருக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சாந்தராம் புட்னா சித்தியின் கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையா எழுத்து மூலமாக கூறியதாவது:வனப்பகுதியில் அரசு நிலத்தில் வசிப்போருக்கு, உரிமை பத்திரம் வழங்கப்படுகிறது. வன உரிமை சட்டத்தின் கீழ், 2,99,387 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 16,665 பேருக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது. 2,59,199 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பாக்கியுள்ள விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.மாநிலத்தில் வன உரிமை பத்திரம் வழங்குவது தாமதமாகிறது. மனுக்கள் அளிப்போர், சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாதது, வன உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, வனப்பகுதியில் வசித்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என, பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.