பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்தால் பயனாளிகள் கொதிப்பு!: காங்., அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பெங்களூரு: பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யும் அரசின் நடவடிக்கையால், பயனாளிகள் கொதித்துஎழுந்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இதனால்,'பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது' என, காங்., அரசு உறுதி அளித்துள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சில மாதங்களாக அரசு, ஒன்றன் பின் ஒன்றாக, சர்ச்சைகளில் சிக்கி அவதிப்படுகிறது. வால்மீகி ஆணையம் முறைகேடு, 'முடா' மனை முறைகேடு, வக்பு வாரிய சொத்து என, அடுத்தடுத்த விவாதங்களில் சிக்குகிறது.இதற்கிடையே, பி.பி.எல்., எனும் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கான ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதன் மூலம், மற்றொரு பிரச்னையை இழுத்து விட்டு கொண்டது. மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, பி.பி.எல்., ரேஷன் கார்டு, அந்த்யோதயா கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, கடனுதவி உட்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.உணவு தானியங்களை பெறுவதை விட, மருத்துவ சிகிச்சை சலுகைக்காகவே பல ஆயிரக்கணக்கானோர், பி.பி.எல்., கார்டுகளை பயன்படுத்துகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்கள், கர்நாடக அரசின் வாக்குறுதி திட்டங்களின் பயனாளிகளாக, பி.பி.எல்., ரேஷன் கார்டு கட்டாயம். இந்த திட்டங்களின் பலனை அனுபவிக்க, தகுதியற்ற பலரும் பி.பி.எல்., கார்டு பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று கார்டுகள் கூட வைத்துள்ளனர்.பி.பி.எல்., கார்டுகள் பெற, பல விதிமுறைகள் உள்ளன. நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளோர், வருமான வரி செலுத்துவோர், 7 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வைத்துள்ளோர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பி.பி.எல்., கார்டு பெற தகுதி இல்லாதவர்கள். ஆனால் இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், அரசுக்கு தேவையற்ற பொருளாதாரச் சுமை ஏற்படுகிறது.தகுதியற்றவர்கள் வைத்துள்ள பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கை, பல ஆண்டுகளாகவே நடக்கிறது. ஆனால், இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போதைய அரசின் வாக்குறுதி திட்டங்களை, செல்வந்தர்கள், அரசு ஊழியர்கள் போன்ற தகுதியற்றோர் பெறுவதால், ஆண்டுக்கு ஆண்டு செலவு அதிகரிக்கிறது. இதை மனதில் கொண்டு, தகுதியற்றோர் பெற்றுள்ள பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்து, ஏ.பி.எல்., கார்டுகளின் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் இந்த நடவடிக்கையால், உண்மையான பயனாளிகள் பாதிப்படைவாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஹாசனில் 3,925 பி.பி.எல்., கார்டுகள், ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு இனி இலவச உணவு தானியங்கள் கிடைக்காது. அரசின் திட்டங்கள், மருத்துவ சிகிச்சை சலுகை பெற முடியாது.அரசின் நடவடிக்கையை பயனாளிகள், எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர். ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வழியாக தங்கள் கொதிப்பை வெளிப்படுத்துகின்றனர். சூழ்நிலை மோசமாவதை கண்ட முதல்வர் சித்தராமையா, 'பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படாது' என, உறுதி அளித்துள்ளார்.பாகல்கோட்டில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:பி.பி.எல், கார்டுகள் ரத்தாகிறது என்பதே, தவறான குற்றச்சாட்டு. ஊடகத்தினர் எதையும் தெளிவாக புரிந்து, செய்தி வெளியிட வேண்டும். உண்மையான பயனாளிகளின் பி.பி.எல்., ரேஷன் கார்டுகளை, நாங்கள் ரத்து செய்யவில்லை. தகுதியற்றவர்கள் வைத்துள்ள கார்டுகளை திரும்ப பெறுவது மட்டுமே, எங்களின் நோக்கமாகும்.உண்மையான பயனாளிகளுக்கு, எந்த தொந்தரவும் ஏற்படாது. தகுதியில்லாதவர்கள் பெற்றுள்ள பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்ய, உணவுத்துறை ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் பி.பி.எல்., கார்டுகள் வைத்திருந்தால், அந்த கார்டுகள் மட்டுமே ரத்தாகலாம்.அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த கார்ப்பரேஷன், வாரியங்கள், அரசு நிறுவனங்கள், வருமான வரி செலுத்துவோர், 7 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வைத்துள்ளோர்;வாழ்வாதாரத்துக்காக வைத்துள்ள டிராக்டர், கேப், டாக்சி போன்ற நான்கு சக்கர வாகனங்களை தவிர, சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கரம் வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருவாய் 1.20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்கள், பி.பி.எல்., கார்டு பெற தகுதி அற்றவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தகுதியற்றோர் வைத்துள்ள பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்யும், மாநில அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்; விமர்சிக்கவில்லை. பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் பெற, வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில், மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த விஷயத்தில், அரசின் முடிவு சரிதான்.- ராகவேந்திரா, பா.ஜ., எம்.பி.,அரசு திவால் ஆனதால், பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்கிறது. சரியான திட்டமிடல் இல்லாமல், வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியதே பிரச்னைகளுக்கு காரணம். அனைத்து திட்டங்களும் பாதியில் நின்றுள்ளன. இது குறித்து உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவிடம் பேசுவேன்.- பிரஹலாத் ஜோஷி,மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர்