கெஜ்ரிவாலுக்கு பங்களா ஒதுக்கீடு
புதுடில்லி : ஆம் அத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லியில் உள்ள எண் 95, லோதி எஸ்டேட்டில் பங்களா ஒதுக்கப் பட்டுள்ளது. டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,மதுபான ஊழல் வழக்கில் கைதானதை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். இதைத்தொடர்ந்து கட்சியின் ராஜ்ய சபா எம்.பி., அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தற்காலிகமாக தங்கி வருகிறார். இந்நிலையில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளதால் கெஜ்ரிவாலுக்கு டில்லியில் வீடு ஒதுக்கித் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் அவரது கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பயன்படுத்திய, எண் 35, லோதி எஸ்டேட் பங்களாவை கெஜ்ரிவாலுக்கு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஓராண்டுக்கு பின் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து எண். 95, லோதி எஸ்டேட் பங்களாவை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கி உள்ளது. இந்த பங்களா, 5,000 சதுர அடியுடன், நான்கு படுக்கை அறை கொண்டது.