தீப்பிடித்து எரிந்த பஸ்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
புதுடில்லி:மேற்கு டில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள பனஹா சாலையில் அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது சாலையின் குறுக்கே மாடு வந்ததால், அதன் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக டிரைவர், காரை திருப்பினார். எதிர்பாராத விதமாக கார், சாலை தடுப்பில் மோதியது. காரின் பின் வந்த இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து கார் மீது மோதின. இதில், இரண்டு பஸ்கள் மற்றும் கார் தீப்பிடித்து எரிந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனங்களில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இரண்டு பஸ் மற்றும் ஒரு கார் முழுமையாக சேதமடைந்தன. விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.