உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபர் கொலை மனைவி கவலைக்கிடம்

தொழிலதிபர் கொலை மனைவி கவலைக்கிடம்

உத்தரகன்னடா: திருவிழாவுக்கு வந்திருந்த தொழிலதிபரை, அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். அவரது மனைவி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.உத்தரகன்னடா, கார்வாரின் ஹனகோனா கிராமத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் விநாயக் நாயக், 52. இவர், தற்போது மஹாராஷ்டிராவின் புனேவில் வசிக்கிறார். இங்கு எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்கிறார்.ஹனகோனா கிராமத்தில் உள்ள சாத்தேரி தேவி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ஏழு நாட்கள் திருவிழா நடக்கும். இந்த நாட்களில் மட்டுமே, சாத்தேரி தேவியின் தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலின் மூலஸ்தானம் மூடியே இருக்கும்.திருவிழாவை பார்க்கும் நோக்கில், தொழிலதிபர் விநாயக் நாயக், தன் மனைவி வைஷாலி, 48, உடன் 10 நாட்களுக்கு முன், தன் சொந்த கிராமத்துக்கு வந்திருந்தார். திருவிழா முடிந்ததால் நேற்று அதிகாலையில், தம்பதி புனேவுக்கு புறப்பட தயாராகினர்.அப்போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் விநாயக் நாயக்கை வெட்டி கொலை செய்தனர். அவரது மனைவியை தாக்கிவிட்டு தப்பியோடினர்.தகவலறிந்து அங்கு வந்த சித்தாகுலா போலீசார், தொழிலதிபரின் உடலை மீட்டனர். காயங்களுடன் இருந்த அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.தொழிலதிபரின் கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. கொலையாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைத்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !