முன்ஜாமினுக்கு நேரடியாக ஐகோர்ட்டை அணுகலாமா?: 3 நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணை மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்ஜாமின் பெற, முதலில் செஷன்ஸ் நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பது கட்டாயமா அல்லது விருப்பத்தின் பேரில் நேரடியாக உயர் நீதிமன்றங்களில் முறையிடலாமா என்பது குறித்த வழக்கு விசாரணையை, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் முன் ஜாமின் பெற, முதலில் செஷன்ஸ் நீதிமன்றங்களை அணுகாமல் நேரடியாக உயர் நீதிமன்றங்களை அணுகும் போக்கு சமீப காலங்களாக அதிகரித்தது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யாமல் கேரள உயர் நீதிமன்றமும் தொடர்ந்து விசாரணைக்கு ஏற்று வந்தது. கடந்த செப்., 8ம் தேதி, கேரள உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக வரும் முன்ஜாமின் மனுக்களை கேரள உயர் நீதிமன்றம் விசாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 'இது உச்ச நீதிமன்றத்தை கவலை அடைய வைத்துள்ளது. மற்ற எந்த மாநிலங்களிலும் இப்படி நடப்பதில்லை. கேரள உயர் நீதிமன்றம் மட்டுமே நேரடியாக வரும் முன்ஜாமின் மனுக்களை விசாரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்' என, கேள்வி எழுப்பியது. மேலும், 'முன்ஜாமின் பெற முதலில் செஷன்ஸ் நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பது கட்டாயமா அல்லது விருப்பத்தின் பேரில் நேரடியாக உயர் நீதிமன்றங்களில் அதற்காக முறையிடலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்' என தெரிவித்தது. இதில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா நியமிக்கப்பட்டார். கேரள உயர் நீதிமன்றமும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.