கனடா பத்திரிகை குற்றச்சாட்டுக்கு அரசு பதிலடி
புதுடில்லி, 'காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சதி திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்' என, கனடா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு, 'சிரிப்புதான் வருகிறது' என, நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கொல்லப்பட்டார். அரசு கண்டனம்
கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.தற்போது கனடாவில் உள்ள ஊடகங்கள், உயர் அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஒரு செய்தியை வெளியிட்டுஉள்ளன. நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான சதி திட்டம், பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும். மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கும் இது தொடர்பான தகவல்கள் தெரியும் என, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உறவை மோசமாக்கும்
நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:கனடா பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி கண்டனத்துக்கு உரியது. உண்மையில் அது சிரிப்பை தான் வரவழைத்தது. வெறும் கண்டனத்துடன் நிராகரிக்க வேண்டியது இந்த செய்தி.ஆனால், இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான பொய் பிரசாரம், ஏற்கனவே மோசமாக உள்ள இரு தரப்பு உறவை இன்னும் மோசமாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்துக்களுக்கு மிரட்டல்!
கனடாவின் ஓக்வில்லேவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் ஆயுள் சான்று வழங்கும் முகாமுக்கு இந்திய துாதரகம் நாளை ஏற்பாடு செய்துள்ளது. அதுபோல், ஸ்கார்பரோவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவிலில், 30ம் தேதி இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என, காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.