உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தயாரிப்பாளரை மிரட்டியதாக நடிகர் தர்ஷன் மீது வழக்கு

தயாரிப்பாளரை மிரட்டியதாக நடிகர் தர்ஷன் மீது வழக்கு

கெங்கேரி: பண விஷயத்தில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் பரத்தை மிரட்டியதாக, நடிகர் தர்ஷன் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் தர்ஷன், 47. சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், பல்லாரி சிறையில் உள்ளார். கொலை வழக்கில் கைதாகி விசாரணை நடந்தபோது, கன்னட திரைப்பட தயாரிப்பாளர் பரத்தை, தர்ஷன் மிரட்டியதாக கூறப்படும், ஆடியோ வெளியாகி இருந்தது.நேற்று முன்தினம் பெங்களூரு கெங்கேரி போலீஸ் நிலையத்தில், தன்னை மிரட்டியதாக தர்ஷன், அவரது மேலாளர் நாகராஜ் மீது, பரத் புகார் செய்தார். அந்த புகாரில் இருவர் மீதும் வழக்குப்பதிவானது.இதுகுறித்து பரத் நேற்று கூறியதாவது:கடந்த 2020ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா என்ற பெயரில், திரைப்படம் தயாரித்தேன். தர்ஷன் நடித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு நின்றது. பின், எனக்கும், தர்ஷனுக்கும் பண விஷயத்தில் தகராறு ஏற்பட்டது.எனக்கு அவர் பணம் தர வேண்டும். பணம் தர மறுத்ததுடன், என்னை மிரட்டினார். இதுகுறித்து கெங்கேரி போலீசில் 2022ல் புகார் செய்தேன். என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன்.ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் கைதானபோது, என்னை அவர் மிரட்டிய ஆடியோ வெளியானது. இதுபற்றி மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் என்னிடம் விசாரித்தார். போலீஸ் நிலையத்திற்கும் சென்று ஆஜராகி விளக்கம் அளித்தேன். இப்போது நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும், தர்ஷன், நாகராஜ் மீது புகார் அளித்தேன். போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தர்ஷனை, என் அண்ணனாக தான் பார்த்தேன். கொலை வழக்கில் அவர் கைதானபோது, அவரை நினைத்து கண்ணீர் வடித்தேன். இப்போது அவர் முதுகுவலியால் அவதிப்படுகிறார் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அவரது முதுகுவலி சரியாகட்டும்; பண பிரச்னை தொடர்பாக, தர்ஷன் சார்பில் யாராவது என்னிடம் சமாதானம் பேசினால், புகாரை திரும்பப் பெறவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை