பழனிசாமிக்கு எதிரான வழக்கு: டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு
புதுடில்லி: அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த விவகாரத்தில், அதற்கு எதிரான வழக்கில், இனி யாரும் கால அவகாசம் கேட்கக்கூடாது என டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளதுஅ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டபோது கட்சி யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை தேர்தல் ஆணையம், பழனிச்சாமி பிரிவை அங்கீகரித்ததுடன், அவரை கட்சியின் பொதுச் செயலாளராகவும் அங்கீகரித்தது. அப்போது, இந்த உத்தரவு, நிலுவையில் இருக்கும் சிவில் வழக்குகளின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் விளக்கம் அளித்திருந்தது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, டில்லலி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ''தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் தான் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து உள்ளது. எனவே இந்த வழக்குகளை டில்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.இதையடுத்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, ''அடுத்த முறை கண்டிப்பாக அனைத்து தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்க வேண்டும். ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைக்க கூடாது. இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் நகலை பழனிச்சாமி தரப்பு சமர்ப்பிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.